வானம் லேசாக இருட்ட தொடங்கியுருந்த நேரம். மழை வேறு விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது. வேலூர் போறதுக்காக எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷன்-கு ஒரு மணி நேரம் முன்னாடியே வந்திருந்தேன். ரயில்வே ஸ்டேஷன்ல வேடிக்கை பார்த்திட்டு உக்கார்றதுனா நமக்கு கொஞ்சம் EXTRA இஷ்டம்.
நம்ம நண்பர் கூட்டம் வேற அன்னிக்கு யாரும் ஊருக்கு போகலை, அதனால தனியாதான் வந்திருந்தேன். என்ன, நம்ம நேரம்..வழக்கத்துக்கு மாறா அன்னிக்குன்னு பிளாட்பாரமே வெறிச்சோடி கெடந்துச்சி. உள்ளுக்குள்ள ஒரு சின்ன சோகம், அப்படியே பக்கத்துல காலியா இருந்த பெஞ்சுல உக்கார்ந்தேன்.
அதே பெஞ்சில் வயதானவர் ஒருத்தர் வாயில் வெற்றிலையுடன் என்னை பார்த்துக் கொண்டிருந்தார். ஒமனாக்கள் யாரும் காணாததால், பையில் இருந்து அவனி சுந்தரியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அந்த பெரியவர் என்னை பார்ப்பதாக தோன்றியது.மெதுவாக தலையை நிமிர்த்தினேன், அவர் என்னையும் புத்தகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.அவருக்காக சாம்பிள்-க்கு ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு திரும்ப அவனி சுந்தரியோட ஐக்கியமாயிருந்தேன்.
ஒரு சில நிமிஷத்துல ஒரு மலையாள குடும்பம் எங்களுக்கு பக்கத்துல இருந்த பெஞ்சுல வந்து உக்கார்ந்தாங்க.அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, பாட்டி என ஐவரும் வெளியூர் போகிறார்கள் போல என்று எண்ணி, நான் படிப்பதை தொடர்ந்தேன். அவ்வப்போது என்னை கடந்து செல்பவர்களையும் பார்த்து கொண்டிருந்தேன். அப்படியே அந்த பெரியவரையும். அவர் கண்கள், அவரின் தூக்கமின்மையை வெளிச்சம் போட்டு காட்டிகொண்டிருந்தது. ஏனோ எனக்கு அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் எழவேயில்லை. வழக்கமாய் என் பக்கத்தில் இருப்பவர்களிடமோ, என்னுடன் பயனிப்பவர்களுடனோ நானே வழிய சென்று சில சமயம் பேசுவது உண்டு. இன்று ஏனோ, அவனி சுந்தரியுடனே ஐக்கியமாகி இருந்தேன்.
யாரோ என்னை கூப்பிடுவதாக உணர்ந்து தலை நிமிர்ந்தேன், மலையாள அண்ணன் எதிரே நின்று கொண்டிருந்தார். வந்த சில நிமிடங்களிலேயே அவர்களில் அண்ணன் மட்டும்தான் ஊருக்கு போகிறார் என்றும், மற்றவர்கள் அனைவரும் அவரை வழியனுப்ப வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் பேசியதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
டிரெயின் சரியான டைமுக்குதான் வருகிறதா என்று மலையாளத்தில் வினவினார், ஆம் என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்து கொண்டிருந்தேன். கையில் இருந்த புத்தகத்தை பார்த்துவிட்டு நீங்கள் தமிழா என்று கேட்டார், ஆமாம் என்று சொல்லிவிட்டு அவனி சுந்தரியை தொடரும் ஆர்வத்தில் மீண்டும் படிக்க தொடங்கினேன்.
திடீரென்று எதையோ உணர்ந்தது போல் அந்த பெரியவரை பார்த்தேன், அவரும் அதையே எதிர் பார்த்தவர் போல, 'தம்பி தமிழா ?' என்றார். ஆமாங்க என்று சட்டென முடித்துகொண்டேன் பேச்சு தொடர விரும்பாதவனாய்.
மீண்டும் அவர், "எந்த ஊருப்பா நீங்க ?" - என்றார்.
"நான் வேலூர்ங்க, வீட்டுக்கு போறேன்" -என்று சொல்லி முடித்துவிட்டு அவரையே பார்த்து கொண்டிருந்தேன், பேச்சை முடித்துவிட்டு புத்தகத்தை படிக்கலாம் என்று.
"இங்க என்ன படிக்கிறீங்களா தம்பி ?"
"இல்லங்க வேலை செஞ்சிட்டு இருக்கேன், கம்ப்யூட்டர்ல" - புரிந்ததாய் தலை ஆட்டினார்.
இம்முறை நான் கேள்வி கேட்க தொடங்கினேன்.
"நீங்க எந்த ஊரு?"
"நான் இங்கன தஞ்சாவூருப்பா, திருச்சி வண்டிக்காக உட்கார்ந்திருக்கேன், நாளக்கி காலைல எறங்கி மாறணும்" - என்றார்.
"எனக்கும் சொந்த ஊரு தஞ்சாவூர்தாங்க" - என்றேன். நானும் தஞ்சாவூர் என்றதில் அவருக்கு ஒரு சந்தோசம்.
"இங்க யாரையும் சொந்தக்காரர்களை பார்க்க வந்தீகளா ?"
"இல்லப்பா, ஒரு வேலை விஷயமா மொதலாளி அனுப்பி வச்சாரு, ஒடம்பு சுகப்படாம போச்சு, அதான் ஊருக்கு திரும்பி போயிட்டு இருக்கேன்"
பதறியவனாய் காட்டிக்கொண்டு என்ன ஆச்சு என்றேன் ?
என்னன்னே தெரியலப்பா நேத்து ராத்தியில இருந்து ஒன்னும் முடியல, காலேல டாக்டருக்கிட்ட காண்பிச்ச உடனேதான் தேவலையா போச்சு"
"இப்ப எப்படி இருக்கு என்றேன் ?"
"இப்ப பரவா இல்லப்பா, காலைலாதான் சுத்தமா தெம்பில்லாம போச்சு...
இருவரும் "லேசாக" நண்பர்கள் ஆகிவிட்டதால் பேச்சை தொடர்ந்தோம்.
அவர் இங்கு வந்து கடந்த பத்து நாட்களாய் பட்ட அல்லல்களையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் அவரை நன்றாய் கவனிக்கலானேன். பழுப்படைந்து போன ஒரு வேட்டி, அதே நிறத்திலொரு சட்டை, சவரம் செய்யாத முகம், வெற்றிலை கரையேறிய பற்கள், ஜிப் அறுந்த நிலையில் ஆனந்தா டெக்ஸ்டைல்ஸின் தோள்பை, அளவுக்கு மீறி உழைத்து கொண்டிருக்கும் கழற்றி விடப்பட்ட காலணிகள், அப்பட்டமாய் விளக்கின அவரின் நிலையை.
பேச்சில் சுவாரஸ்யமான அவர், தன் வேலையை பற்றி கூறத் தொடங்கினார். சுமார் அறுபது வயதை தாண்டியிருந்த அவர் இன்றும் விசேஷங்களுக்கு பந்தக்கால் அமைக்கும் வேலையில் உள்ளதாக சொன்னார். வேலை நாட்களில் மட்டும் கிடைக்கும் கூலியை வைத்து தனது மூன்று மகனையும் பாலிடெக்னிக் வரை படிக்க வைத்ததை சற்று பெருமையுடனே சொன்னார். அவரின் இரண்டாவது மகன் மட்டும் நிரந்த வேலை பெற்றுள்ளதையும், மூத்தவர் அவ்வப்போது மட்டும் வேலைக்கு செல்வதை சொல்லி கடிந்து கொண்டார்.
"சின்னப்பய இந்த வருஷம்தான் படிப்ப முடிக்கிறான்".
"அப்புறம் என்னங்க இந்த வருஷத்தோட நீங்க வேலைய விட்டு நின்னுக்கிடலாம் ?"
"இல்ல தம்பி, ரெண்டாவது பய பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு இருவதுனாயிரம் செலவு செஞ்சிருக்காம்பா"
அவருக்கு ஒரு பொண்ணு இருப்பதையும், அவளுடைய படிப்பை பற்றியும் இவர் ஏன் சொல்லவில்லை என்று ஒரு நிமிடம் தோன்றியது, அவர் பேச்சை தொடர்ந்ததால் அதை கேட்க முடியாமல் கவனிக்கலானேன்.
"அந்த காசை எப்படியாவது ரெண்டு மூணு வருஷத்துல சம்பாரிச்சு அவன்கிட்ட கொடுத்திடணும்பா......." என்றார் எங்கேயோ பார்த்துக்கொண்டே....
அவர் சொன்னதை கேட்டு பேச்சற்றவனாய் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தேன். "போறதுக்குள்ள முடிஞ்ச வரைக்கும் சேத்து ஆளுக்கு கொஞ்சம் கொடித்திட்டு போகணும்பா" என்றார்.
நிச்சப்தம் எங்களிடையே மெல்ல ஊடுருவியிருந்தது. அவர் கண்கள் கசிந்து மெல்லிய ரேகையாய் கண்ணீர் கீழ் இறங்கி கொண்டிருந்தது. இருவரும் சிறிது நேரம் பேசவில்லை.
சொந்த மகன் காசையே கடனாக பார்க்கிறாரே ? இவ்வளவுதானா உலகம் ? இன்னும் எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து அடங்கின.
எனது வண்டி இன்றும் நேரம் தவறிதான் வந்தது. அவரிடம் சொல்லிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தேன். அந்த பெரியவர் எங்கோ பார்த்துக்கொண்டு எதையோ யோசித்து கொண்டிருந்தார். ...!!!
"எல்லா அப்பாக்களுமே இப்படித்தானோ ??? "
நெகிழ்வா இருந்தது !! நானும் பார்த்திருக்கேன் :(
ReplyDeleteநல்லா இருந்தது மச்சான்.
ReplyDelete....
வேலுரா ?
நன்றி ரெட்மகி மச்சான்,
ReplyDeleteஆமாங்க இப்ப இருப்பது வேலூரில்தான்.
வழிய சென்று சில சமயம் பேசுவது உண்டு./////
ReplyDelete'வலிய' இல்ல? பொண்ணுங்கட்ட போய்தான் பேசுவீங்களோ, 'வழிய'.
கொஞ்சம் டச்சிங்தான் பாஸ்!
ஆஹா பப்பு மச்சி....நீங்க வாத்தியாரா....? ஒரு எழுத்துல இவ்வளவு அர்த்தம் மாறுதா ? சரி எப்படி வேணும்னாலும் வச்சுக்கங்க...ரெண்டும் ஒண்ணுதான்...
ReplyDeleteநன்றி பப்பு மச்சான்..!!!
oru appavukku rosham iruppadhil enna thappu irukku?
ReplyDelete