Tuesday, September 29, 2009

உலகின் மிகச்சிறிய காதல் கதை

சில சிற்றின்பங்களை எல்லாம் காதல் என்று வகைப்படுத்தினால், இதுதான் உலகத்தின் மிகச்சிறிய காதல் கதை. நொடிப்பொழிதில் மொட்டு விட்டு, மலர்ந்து, மணம் வீசி, உலர்ந்து, கருகி பின்னர் மறைந்தும் போனது.
அந்த காதல் சம்பவம் நான் கல்லூரியில் படித்த கொண்டிருந்தபோது நடந்தது செமஸ்டருக்கு ஒரு முறை ஐ.வி. (INDUSTRIAL VISIT-னு சொல்வாங்க) போறது வழக்கம். மூன்றாவது வருஷம் படிச்சிட்டு இருக்கும்போது ஸ்ரீ ஹரிக்கோட்டாவுக்கு போக அனுமதி கெடச்சது. தனியா பஸ் வாடகைக்கு எடுத்துட்டு காலைல நாலு மணிக்கு கெளம்பினோம். ஐ.வி எல்லாம் முடிச்சிட்டு திரும்பி சென்னை வரும்போது சாயாந்திரம் மணி ஆறு.
பஸ்ஸ நேரா மெரினா பீச்சுக்கு விட்டாரு டிரைவர் அண்ணன்.(அங்கதான் சிட்டிக்குள்ள பார்கிங் ப்ராப்ளம் கிடையாது)..அங்க இருந்து ஒரு எட்டு மணிக்கு கெளம்பலாம்னு முடிவு செஞ்சு எல்லாரும் குரூப் குரூப்பா பிரிஞ்சு பீச்சுக்கு போனோம்....(எங்க குரூப்ல எல்லாமே சேவல்தாங்க ) ரெண்டு மணி நேரம் கழித்து பஸ்சுக்கு போகலாம்னு பீச்லேர்ந்து பஸ்ஸ நோக்கி நடந்திட்டு இருந்தோம்...என் கூட ஒரு நாலைந்து நண்பர்கள்...
அப்போ மெரீனா பீச்ல கடைகள் ரெண்டு தெரு போல் அமைக்கப்பட்டிருந்திச்சு. ஒரு தெருவின் வழியா நாங்க ஒவ்வொரு கடையா மேஞ்சுட்டு போயிட்டு இருந்தோம். அப்போதைக்கு எங்களோட குலத்தொழிலே மேய்தல் தான் (அதுல சாப்பிடுறது பாக்குறது ரெண்டுமே அடக்கம்).
(இதோ ஆரம்பம் என் குட்டி காதல்(?) கதை.)
எனக்கொரு கெட்ட பழக்கம் உண்டு ....யாரையாவது பார்த்தா அவங்களா பார்வையை திருப்புற வரைக்கும் அவங்கள பாத்திட்டு இருப்பேன்... உடனே பார்வையை திருப்பிட்டு போய்டுவாங்க..... இதுவரை எல்லாரும் அப்படித்தான். இன்றும் அப்படிதான், நான் நிறைய பேர பாத்துட்டே நடந்து கொண்டிருக்கும்போது,
என்னையும் மீறி(?) ஒரு மையலில் என் பார்வை நிலை கொண்டது... எதிர் திசையில், எனக்கு சில அடி தூரத்தில் பக்கத்து கடைவரிசையில் ஒரு யுவதி....அவள் தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள்.... வீஷேசம் யாதெனில் நான் நோக்கிய அதே சமயம், அந்த அழகிய இரு கரு விழிகளும் இங்கு யாமிருக்கும் இடம் நோக்கி நிலை கொண்டது. இருவருமே பார்வையை திருப்பவில்லை. அவ்வளவு வசீகரமான அந்த முகம் என்னை இமை கொட்டாமல் பார்க்க வைத்தது. கால்கள் மட்டும் நடப்பதை நிறுத்தவில்லை...
எதிர் எதிர் திசையில் இப்போது இருவரும் நெருங்கி கொண்டிருந்தோம். என் பார்வை எல்லாம் அவள் மீது மட்டும்தான் படர்ந்திருந்தது. என்னுடன் என் நண்பர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை
இருவரும் ஒருவரை ஒருவர கடக்கும்போதும் பார்த்துக்கொண்டேதான் கடந்தோம்....கடந்த பின்னும் அவளை பார்த்துக்கொண்டேதான் நடந்தேன்...அப்பொழுது எனக்கு வேறெதுவுமே தோன்றவில்லை. உலகமே அவளது இரு விழிகளுக்குள் அடங்கியிருந்தன... அங்கேயும், சிறிதும் சலனமின்றி அவளும் என்னை போலவே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்நொடியில் என் நினைவில் எதுவுமே இல்லை...அவள் விழிகளை தவிர....
இவை அனைத்தையும் என் நண்பனொருவன் கவனித்து விட... டக்குன்னு என்ன தட்டி,
“என்னடா நடக்குது இங்க - என்ன மச்சி தெரிஞ்ச பொண்ணா ..”
“ஊஹூம் ”
“அப்ப யாருடா அது..”
“தெரியல..”
இப்போதும் பேசிய படியே திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தேன்... அங்கேயும் அப்படிதான்...
அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே நடந்தவையை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது...மெதுவாய் புன்னகைத்துக்கொண்டே மீண்டும் பாத்தேன்....என் சிரிப்பு அந்த யுவதியையும் தொற்றியது..அவளும் சிரித்தாள்...அழகாய் சிரித்தாள்...
அவள் சிரித்ததை கண்டவுடன், என் சிரிப்பு மேலும் கூடியது....இருவரும் இப்போது புன்னகைத்து கொண்டிருந்தோம்...
இந்த நேரத்தில் நாங்கள் எதிர் எதிர் திசையில் சிறிது அதிக தூராத்தில் விலகி இருந்தோம்... நடப்பதை தான் நாங்கள் நிறுத்தவே இல்லையே...
உற்சாகத்தில் என் நண்பன் “ கையை காமிடா ..” என்றான். அவன் சொன்னவுடன் சிறிதும் தாமதிக்காமல் கைய்யை தூக்கி டாட்டா காட்டுவது போல் சைகை செய்தேன்......
முதல் நொடி மௌனம்...
அந்த யுவதி அமைதியானாள்...
இரண்டாம் நொடியும் கடந்தது...
பதிலும் இல்லை, பார்க்கவும் இல்லை...
தப்பாக ஏதும் செய்து விட்டோமோ என்று ஒரு நிமிடம் தோன்றியது.... மெரினாவே மயான அமைதியில் இருப்பது போல் தோன்றியது...
அரைநொடி பொழுதில் சோகம் என் முகத்தில் இருளை பூசியது.... அவ்வளவுதான் என்று நினைக்க முற்ப்பட்டபோது ... அவள் என்னை நோக்கி தன் கையை அசைத்தால் ....டக்கென்று உற்சாகம் எங்களுக்குள் மீண்டும் குடி கொண்டது ...என் நண்பர்கள் அனைவரும் ஒரு சின்ன வெற்றி கூச்சலே இட்டனர்..!!!
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே... எங்கள் பார்வையின் நடுவில் மக்கள் அதிகமாயினர், இருவரின் விழிகளும் மக்களோடு மக்களாய் மத்தியில் தொலைந்தது.... அந்த சின்ன வெற்றியே என் மனதை முழுதாய் ஆட்கொண்டிருந்தது.. அப்போதைக்கு வேறேதும் செய்யவும் என் மனதில் தோன்றவில்லை... உலகையே மறந்தவனாய் அந்த விழிகளின் மௌன ஈர்ப்பையே நினைத்துக் கொண்டிருந்தேன்....
.
.
.
.
. “ அய்யோ அவளை நான் விட்டு விட்டேனே என்று எனக்கு உறைத்த போது எங்கள் பஸ் தாம்பரத்தை நெருங்கி கொண்டிருந்தது “ அந்த கதை அன்றோடு முடிந்தது....நினைவுகள் மட்டும் என்னிடம்.... இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையில் நான் விவரித்திருக்கிறேன்.... இதை நீங்கள் " முட்டாள்தனம்", " பிதற்றல்", வெறும் சிற்றின்பம்" " எதிர்பால் ஈர்ப்பு" என்று எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளுங்கள். “இவை எல்லாமே காதலின் துணைஎழுத்துதான் ”

Friday, September 25, 2009

நெற்றிப் பொட்டு வலிக்கிறது....!


"தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது",
எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர்,
கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை
சில மாதங்களுக்கு முன் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. 

படித்தப் பின் எனக்கு தோன்றியது:


என்னத்த சொல்ல ...
இக்கவிதைய ஒரு நூறு தடவ படிச்சாச்சு ..
இனம் புரியா சோகம் ..
நம் இனம் அழியும் சோகம் ..
நெற்றிப் பொட்டு வலிக்கிறது....

விரக்தியின் உச்சகட்டம் ? 
வெறுப்பு உமிழ்தல் ?
இயங்க முடியா இயலாமை ? 
இனம் இனம் என்று சுய லாபத்திற்கு மட்டும் பீற்றும்,
அரசியல் வியாதிகளுக்கு ஒரு சவுக்கடி ! 
திரையில் மட்டும் தமிழ் முழங்கும் ,
புரட்சி தமிழ் நாயகர்களுக்கு ஒரு சாட்டை அடி !! 
சும்மா பதிவுகளை மட்டும் பார்த்தும் , படித்தும்,
பாவப்படும், நமக்கும் சேர்த்துத் 
தான் இந்த சாபம் !!
தாமரைகண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

 இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறுநான் வேறு!

 இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்.......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்நிரந்தரமாகப் போகட்டும்!

..........
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
                                                                                           ---கவிஞர் தாமரை

Thursday, September 24, 2009

கஸ்டமர் கேர் - லொள்ளு

செல்லுக்கு MMS ஆக்டிவேட் செய்யலாம்னு கஸ்டமர் கேருக்கு போன் பண்ணேன். எல்லா வெவரத்தையும் கேட்டுட்டு PHONE- அ வக்கலாம்னு போகும்போது , சார் , உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஆப்பர் இருக்கு சார். உங்களுக்கு மட்டும் இலவசமா ஒரு ADD ON கார்டு தர்றோம் வாங்கிக்கிறீங்களா சார் அப்படினான். ( ஆஹா நீங்களுமாடா...ஏற்கனவே இப்படித்தான் ஒரு மார்க்கெட்டிங் கால்ல மாட்டி சிக்கி சின்னாபின்னம் ஆனேன்....திரும்பவுமா...) - இந்த தடவை என்ன சொன்னாலும் ஒத்துக்ககூடாது.... "இல்ல எதுவும் வேண்டாம். " "சார் இது உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆப்பர் சார்...நீங்க காசே கட்ட வேணாம்... " "இல்லங்க ADDON கார்டு இங்க யாருக்கும் தேவைப்படாது... " "உங்க லவ்வருக்கு குடுங்க சார்.... " "லவ்வரெல்லாம் இல்லங்க...எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... " "அதனாலென்ன சார்....உங்க WIFE- க்கு குடுத்துடுங்க சார்...ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்... " ( விடமாட்டங்கிறானே. ... பிட்ட போட வேண்டியதுதான்.....) "முடியாதுங்க...எனக்கும் என் WIFE- க்கும் டைவர்ஸ் ஆயிடுச்சு.... " ( ஹா ஹா இப்ப என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவே ) . "சாரி சார்.... தெரியாம சொல்லிட்டேன்... " "பரவாயில்லை விடுங்க.... " "சார்...உங்க குழந்தைங்க யாருக்காவது குடுக்கலாமே.... ? " "அதுவும் முடியாதுங்க... " "ஏன் சார்... " "குழந்தை இல்லன்னுதான் என் மனைவியையே நான் டைவர்ஸ் செஞ்சேன்... " "ஐயேம் வெரி வெரி சாரி சார்.... " "இட்ஸ் ஓகே... " "சார் உங்க PARENTS யாருக்காவது.. " "அதுவும் முடியாதுங்க... " "ஏன் சார்... " "பதினஞ்சு வயசுலேயே நான் வீட்ட விட்டு ஓடி வந்துட்டேன்... அவங்கெல்லாம் இப்ப எங்க இருக்காங்கனே எனக்கு தெரியாது... " "சார் உங்க ப்ரெண்ட்ஸ் யாருக்காவது... " "அதுவும் முடியாதுங்க...ரொம்ப வருஷமா ஜெயில்ல இருந்துட்டு இப்பதான் வெளில வந்தேன்...அதனால எனக்கு ப்ரெண்ட்சும் யாரும் கெடயாது... " ( அந்த பக்கம் இப்போது லேசாக குரல் தடுமாறியது...) "சாரி சார் நான் அப்புறம் பேசுறேன்".... டொக் ( போன் கட்டாயிடுச்சு ) ( அப்பாடா..வெற்றி வெற்றி ....எப்படியெல்லாம் பேசி இவங்ககிட்ட தப்பிக்க வேண்டியிருக்கு....ஸு...) - அப்படின்னு நெனச்சுக்கிட்டே வாசல் பக்கம் திரும்பினா... ( அய்யய்யோ...!!! ) என் ROOM MATE வாசல்ல நின்னு என்ன ஒரு மாதிரி மொரச்சுட்டு நிக்கிறான்...... ( பாவம் , அவன் எங்க இருந்து நான் பேசுனத கேட்டானோ...!!!! )

Wednesday, September 23, 2009

"ஹலோ நாங்க ஐயன்னா சீயன்னா பேங்க்ல இருந்து பேசுறோம்...!!!


அது ஒரு செப்டம்பர் மாச சனிக்கிழமை.
லேசான மழைத் தூறல்.

சொந்தமா வீடு கட்டணும்னு முடிவு செஞ்சிருந்த நேரம்.
வீடு கட்ட காசு?

கையுல ஒரு குடைய எடுத்துக்கிட்டு "ஹவுசிங் லோன் " பத்தி விசாரிக்கலாம்னு அந்த ஐயன்னா சீயன்னா பாங்குக்கு கிளம்புனேன். நல்ல வேலைய வெளில கொசுத்தூறல் தான் போட்டுட்டு இருந்தது, அதனால என்னோட ஹார்லி டேவிசன் பைக்லையே கெளம்புனேன். (TVS-50 க்கு எல்லாம் பேரு மாத்தீட்டாலே உங்களுக்கு தெரியாதா? ).

பைக்க வாசல்ல பூட்டிட்டு அப்படியே பேங்கு என்டரன்சு கிட்ட போயிருப்பேன் டக்குனு செல் போன் அடிச்சுது.

ஏதோ ஒரு லாண்ட் லைன் நம்பர்

அப்படியே ஒரு ஓரமா ஒதுங்கி செல்ல எடுத்து காதுக்கு வச்சேன்.

"
அல்லோ"
"
ஹலோ சார், மிஸ்டர். ******* ? "

(
நம்ம – MIND VOICE தான் - ஆகாகாகா யாரோ ஒரு பொம்பளப்புள்ள.....தொண்டைல அல்வாத்துண்ட வச்சிக்கிட்டு பேசுற மாதிரியே இருக்கே....)

"
எஸ் (நமக்கு நல்லா தெரிஞ்ச ஒரே இங்க்லிபீஷ் வார்த்தை, கொஞ்சம் ஸ்டைலா, கம்பீரமா....) நான்தான் பேசுறேன்"

"
இப்ப உங்க கூட பேசலாமா சார்?”

(
நீ பேசாம வேற யாரும்மா என் கூட பேச போற, பேசு பேசு.....தாராளமா பேசு)

"
ஹ்ம்ம், சொல்லுங்க

"
சார் நாங்க ஐயன்னா சீயன்னா பேங்க்ல இருந்து பேசுறோம்"

"
நீங்களுமா ? "

"
ஏன் சார், ஏற்கனவே உங்களுக்கு கால் பண்ணிட்டாங்களா ? "

"
இல்ல நானும் இப்ப ஐயன்னா சீயன்னா பேங்க்ல இருந்துதான் பேசிட்டு இருக்கேன். "

(
சில நொடிகள் மௌனம் - எதையோ தப்பாக புரிந்துகொண்டு....)

சாரி சார், ஒரு லோன் விஷயமா கஸ்டமெர்ஸ் எல்லாருக்கும் கால் பண்ணிட்டு இருந்தேன், அப்படியே தெரியாம உங்களுக்கும் கால் பண்ணிட்டேன்.

லோனா ....? என்ன லோன் விஷயமா ?”

"
நம்ம புதுசா அறிமுகப்படுத்தப்போர ஸ்வர்ண இல்லம் லோன் பத்திதான் சார்.... இன்னிக்குதான் எனக்கு கடைசி நாள் சார்...இன்னைக்குள்ள எப்படியாவது இன்னும் ஒரு அஞ்சு பேரையாவது சேர்த்து விடணும்....அப்பத்தான் எனக்கு இந்த மாச அப்ரைசல் கமிஷன் எல்லாம்......”
... உங்களுக்கு எவ்வளவு கெடக்கும்....
என்ன சார் உங்களுக்கு தெரியாதா...என் சார் இப்படி விளையாடுறீங்க...."

"
என்னது விளையாடுரனா, ஏங்க நீங்களா போன் பண்ணிங்க, நீங்களா விளையாடுரன்னு சொல்றீங்க,
ஏதோ ஹவுஸ் லோன்னு சொன்னியே.... அந்த லோன பத்தி விசாரிக்கத்தான் நான் பேங்குக்கே வந்தேன் "

"
என்னது விசாரிக்கவா? "

"
ஆமா விசாரிக்க ..."

"
அப்ப நீங்க பேங்க்ல வேலை செய்யலியா ?"

"
இல்லையே "

"
மொதல்ல சொன்னிங்க "

"
என்ன சொன்னே ? (சொன்னேன்)

"
ஐயன்னா சீயன்னா பேங்க்ல இருந்து பேசுறேன்னு சொன்னிங்களே "

"
ஆம்மா இப்பவும் சொல்றேன், நான் அங்கேருந்து தான் பேசுறேன் "

"
என்ன சார் கொழப்புறீங்க ? "

"
லோன பத்தி விசாரிக்கறதுக்காக பேங்குக்கு வந்தேன், கரெக்டா நீங்க கால் பண்ணிங்க, அதுதான் நானும் பேங்க்ல இருந்து பேசுறேன்னு சொன்னேன்...
அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போதே....அந்த சைடுல இருந்து ஏதோ ஒரு கெட்ட்ட்ட வார்த்தை காதுல விழுந்தா மாதிரி இருந்துச்சு(அதெல்லாம் இங்க எழுத முடியாதுங்க...)...அப்படியே போனும் கட் ஆயிடிச்சு....
மகா ஜனங்களே நீங்களே சொல்லுங்க இதுல என் தப்பு ஏதாவது இருக்கா ???(WHY ME ????)

Monday, September 21, 2009

சூப்பர் ஸ்டார் in ஆக்ஷன்

இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மட்டும். என்ஜாய்.... படத்த பாருங்க.....அதுலயும் அந்த ஈ மேட்டர் சூப்பர் அப்பு.....

Wednesday, September 16, 2009

காதல் பாலும் கோழி ரத்தமும்.

முதலில் காதல் பால். யார் எழுதிய கவிதையோ, இன்று என்னை களவாடி சென்றது - உன் பெயர். உன்னுடன் பேச வேண்டும் என்று நிறைய நினைத்திருந்தேன், அவை யாவும் நினைவிலேயே அழிந்தது - உனைப்பார்த்த நொடியில்.
இரு கண்ணிமைகள் தான் வாழ்ந்தன உன் பார்வை , என் மீதினில் - அதற்கே இங்கு இதயக் கோளாறு. பாவம் உன்னுடன் வரும் தோழிகள் , யாரேனும் கனியிருப்ப காய் கவர்வாரோ ? "அய்யோ" - கூடாத சொல், தமிழ் அகராதியிலே ! ஆனால் உன்னை பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் மனம் உச்ச ஸ்தாதியிலே அலறுகிறது - "அய்யோ அழகுப் பிசாசு"...! இது காதலின் முடிவு....!!! எங்கள் காதலின் இறுதி அத்தியாயம் அவளின் திருமண பத்திரிக்கையில். இனி கோழியின் காதல். உயிருள்ள கோழியின் கழுத்து ஒரு கையில் - கூரிய வெட்டருவா மறு கையில் !!! இமை துடி நேரத்தில் அருவா கழுத்தை முத்தமிட கோழியின் வெட்கம் சிகப்பாய் வழிந்தது. நாணத்தில் தலை கவிழ்ந்தது உசிரில்லா பொட்ட கோழி. காதல்அடங்காத கத்தி அன்பா பாக்குது கட்டி வச்சிருந்த அடுத்த கோழியை...!!! ---------------------------------------------------------------------------------------------------------------------------------- இத என்னன்னு சொல்ல....!!! ஊருக்குள் இருந்த ஒரே ஆஸ்பத்திரிக்கி இன்று விடுமுறை, டாக்டரின் நாய் செத்துப்போச்சாம் !!!
- சிவன்

Tuesday, September 15, 2009

ஹாலிவுட் - 2010

மச்சான்ஸ், 2010-ல வெளிவரப்போகிற ஹாலிவுட் படங்கள் ஒரு பார்வை தான் இந்த பதிவு.
அடுத்த வருஷம், ஏற்கனவே வெளிவந்து ஹிட்டான பல படங்களோட அடுத்த பகுதி (அதான் மச்சான்ஸ் SEQUEL-னு சொல்வாங்களே) வெளிவருது....முக்கியமா சொல்லணும்னா ஹாரி பாட்டர் & டெத்லி ஹாலோஸ் ( இவர்தான்யா வருஷத்துக்கு ஒரு தடவ தவறாம வந்துடுறார்), இரும்பு மனிதன் 2 (IRON MAN 2), தி ட்விலைட் சாகா : எக்லிப்ஸ் (THE TWILIGHT SAGA : ECLIPSE) மற்றும் தி க்ரானிகல்ஸ் ஆப் நார்னியா - தி வாயேஜ் ஆப் தி டான் ( THE CHRONICLES OF NARNIA - THE VOYAGE OF THE DAWN). பாவம், மேல சொன்ன படத்த எல்லாம் தமிழ்ல டப்பிங் பண்ணும்போது என்ன பேர் வைக்கப்போராங்கன்னு தெரியல.....!!! THE EXPENDABLES – ஆகஸ்ட் 2010.
ராம்போ-4 படத்துக்கு அப்புறம் Sylvester Stallone நடிக்கிற ( இயக்கமும் கதையும் கூட அவரேதான்) படம். இது கண்டிப்பா முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாத்தான் இருக்கும். தென் அமெரிக்க நாட்டுல இருக்க சர்வாதிகாரியை ஒழிக்க புறப்படும் ஒரு குழு. இதுதான் படத்தோட ஒரு வரிக்கதை. அந்த குழுவுல ஏகப்பட்ட அடிதடி மன்னர்கள் இருக்காங்க. ஜெட் லீ, ஜேசன் ஸ்டாதம்(TRANSPORTER அண்ணாச்சி), மிக்கி (WRESTLER படத்துக்காக 2009-ல் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டவர் ), ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் (WWF) மற்றும் அர்னால்ட், ப்ரூஸ் வில்லிஸ் இருவரும் கெஸ்ட் ரோல்ல வர்றாங்க (அதான் கௌரவ தோற்றம்). முதல் படமே பட்டய கெளப்புதுல ? THE LAST AIRBENDER
நம்மூர் மனோஜ் ஷ்யாமளனோட அடுத்த படம். தொடர் தோல்விகளால துவண்டிருக்கும் மனோஜுக்கு இந்த படமாவது கைகுடுக்கும்னு நம்புவோம். படத்தோட இன்னொரு ஹைலைட் ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் DEV PATEL. அவதார் அப்படிங்கற ஒரு அனிமேஷன் தொடர மையமா வச்சு எடுத்திருக்கும் படம் இது. மனோஜ் தன்னோட வழக்கமான த்ரில்லர் படங்களிலிருந்து விடுபட்டு FANTASY FILM-கு மாறியிருக்கார்(முதல் முறையாக வேறொருவர் கதைக்கு மனோஜ் இயக்குகிறார்). THE BOOK OF ELI
மற்றொரு பெரிய நடிகர் டென்சல் வாஷிங்டன் நடிக்கும் ஹீரோயிச திரைப்படம். ஒற்றையாளாக தீய சக்திகளிடமிருந்து அமெரிக்காவையே காப்பாற்றும் நாயகன்.(என்னதான் நம்ம கிண்டல் செஞ்சாலும் படம் BOX OFFICE ஹிட் ஆயிடும்). படத்தின் நாயகி மேக்ஸ் பெய்ன் புகழ் :) மீலா கூனிஸ் (MILA KUNIS). டென்சலின் நடிப்புதான் இந்த படத்திற்கான முக்கிய எதிர்பார்ப்பு. INCEPTION. படத்தோட நாயகன் நம்ம லெனார்டோ டிகாப்ரியோ (டைட்டானிக்). இன்னொரு முக்கியாம்சம் இயக்குனர் க்ரிஸ்டோபர் நோலன் (மெமெண்டோ, டார்க் நைட் படங்களை இயக்கியவர்).இது ஒரு ஆக்சன் கலந்த ஸைன்டிபிக் பிக்ஷன் வகையறா. ROBIN HOOD. இது இன்னொரு மிகவும் எதிர் பார்க்கப்படும் ஒரு படம். ஏன்னா இந்த படத்துலதான் க்ளேடியேட்டர் கூட்டணி மீண்டும் இணைஞ்சிருக்காங்க(Director Ridley Scott and Russell Crowe ). மீண்டும் ஒரு சரித்திர கால திரைப்படம். பிரமிக்கும் போர் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். நம்மூரு ராபின் ஹுட் கந்தசாமிய பாத்தாச்சு, அவங்களோட ராபின் ஹுட் எப்படி இருக்கார்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சுடும்.
மற்ற குறிப்பிட படவேண்டிய திரைப்படங்கள்னு பாத்தீங்கனா, நார்நியாவோட மூன்றாம் பகுதி. தி க்ரானிகல்ஸ் ஆப் நார்னியா - தி வாயேஜ் ஆப் தி டான் ( THE CHRONICLES OF NARNIA - THE VOYAGE OF THE DAWN). ட்விலைட் நாவலின் அடுத்த பகுதி (வேம்பயர் மற்றும் காதல் மையமாக கொண்ட கதை) - ), தி ட்விலைட் சாகா : எக்லிப்ஸ் (THE TWILIGHT SAGA : ECLIPSE) ரோபோ காப் ( அவங்க ஊர்லயும் ரீமேக் நெறைய செய்ய ஆரம்பசுட்டங்க) டிஸ்னி தயாரிப்பில் ஜானி டெப் நடிக்கும் அலைஸ் இன் வொண்டெர்லாண்ட். ப்ரூஸ் வில்லீசின் "COUPLE OF DICKS" - "சிரிப்பு போலீஸ்" கதை. இரும்பு மனிதன் இரண்டாம் பகுதி (IRON MAN 2) மற்றும் ஹாரி பாட்டர் & டெத்லி ஹாலோஸ்.
இந்த எல்லா படத்தையும் பத்தி சொல்லிட்டு இந்த படத்த நான் சொல்லாம போன தெய்வ குத்தமாகிபோயிடும்....
இந்த எல்லா ஹாலிவுட் படத்துக்கும் போட்டியா வருது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.பாத்துடுவோம் நம்ம தலையா ஹாலிவுட்டானு !!!
Related Posts Plugin for WordPress, Blogger...