Monday, June 13, 2011

வோட்கா இரவுகள் - 00 : 01துண்டு துண்டாய் 
என் சதைப்பிண்டத்தை நானே 
கூறிட்டுக் கொண்டிருந்தேன்.. 

இறுதிச்சொட்டு 
உயிரிடமிருந்து 
பீறிட்டு பெருக்கெடுக்க
ஆரம்பித்தது அழுகை..  

தந்தையின் அஸ்தியைக் கரைக்கும் 
தனயனைப்போல் 
மிகச் சிரத்தையுடன் மிச்சமிருக்கும் 
என் கருநீல உடலை
நீர்த்திவளைகளிலான 
கடலில் 
கரைத்துக்கொண்டிருந்தேன்... 

உள்ளங்கையில் ஜனித்து 
உள் நரம்பெங்கிலும் 
வியாபித்திருந்த உன் வாசம் 
போக்கும் ஒரு வகை 
வேள்வி தான் அது.

நீர்த்தொட்ட நொடியினில் 
ஒரு துளியென தொடங்கி..
தீயென ப்பரவி
அண்டத்தின் மிகப்பெரும் 
வாசனைக்கிடங்காக 
உருமாறிவிட்டிருந்தது 
இந்த பாழாய்ப்போன சமுத்திரம் 

இனி என் செய்வேன்
உன் வாசம் களைய..

- அருண். இரா 


Saturday, June 4, 2011

காதல் - இரு நெறி.
காலம் நேரம் காணாது,
கலவி கொள்கின்றன -
கோபுரத்து சிற்பங்கள்.


ஒவ்வா மனதோடு 
பேசாமலேயே பிரிகிறேன் - 
அரைமணி முன் தோன்றிய 
பேருந்து காதலியை. 

வள்ளுவன் வழியில் -
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

 - சிவன்
Thursday, February 17, 2011

முத்தம் குறித்த உரையாடல்களில்...
ஒரு காதலர் தின முன்னிரவில் 
முத்தம் பற்றிய ஆத்மாநாம் கவிதையில் 
தோழமையாய் தொடங்கியது 
நம் உரையாடல்.

முத்தம்...
ஒரு பெண் 
தன் பெண்மையை உணர்ந்து 
மெய் சிலீர்த்திடும் 
சுதந்திரத்தருணம்! 
என்றாய் நீ.

ஒரு பெண்பால் 
வெண்பா வார்த்த நிமிடம் !

அதுவே ஆணுக்கு 
இந்த இதழ்ப்பூட்டு
மனப்பூட்டாய் மலர்ந்து 
மணப்பூட்டாய் உருமாறி
விடுதலைக்கே வெடிகுண்டு 
வைக்குதே! 
வேண்டுமென்றே விதண்டாவாடினேன்..

முத்த நினைவுகளுடன் 
மௌனித்தோம்..
------------------------------------------

நீ எண்ணியவை..

முத்தம்!

அன்பின் வெளிப்பாடு
காதலின் கடைக்குட்டி  
நினைவுக்கோர்வையின் அகவரிசை 
ஆணாதிக்கத்தின் முற்றுப்புள்ளி
யதார்த்தத்தை மீறிய கற்பனை.

~~~~

முத்தத்திற்கும் உண்டு
 இடம் பொருள் ஏவல் 
நெற்றி - பாசம் 
கைகள் - நெருக்கம்
இதழ்கள் - வெட்கம்.

சவ வீட்டிலும் 
சத்தமில்லா தெருக்களிலும் 
பகிரப்படும் முத்தங்கள் 
வெவ்வேறானவை..

~~~~

~~~~

ஏங்கி நிற்கும் 
இதய வெற்றிடத்தை 
எதிர்பாரா ஒற்றை 
முடிவிலி முத்தம்  
மலர்களால் நிரப்பும்.
--------------------------------------------------

 நான் எண்ணியவை..

முத்தம்!

ஒரு நொடிக்கொண்டாட்டம் 
காமத்தின் கதவுத்தாழ்பாள் 
ஏவாளின் ஆப்பில்
பெண் உணர்தலின் முதற்புள்ளி
கற்பனையை மீறிய யதார்த்தம். 

~~~~

முத்தம்!
கண் மூடி கால் தூக்கியும் கொடுக்கலாம் 
கட்டியணைத்து சத்தமின்றியும் சங்கமிக்கலாம்
எட்ட நின்று கையில் கொடுத்து 
காற்றில் தவழவும் விடலாம்..
கண்டம் தாண்டி கைபேசியை 
எச்சில் படுத்தியும் உரைக்கலாம்..

~~~~ 

தீதும் நன்றும் பிறர் தர வாரா 
முத்தமும் அன்பும் தனக்குளிருந்து வாரா..  
தடுத்து பழகாதீர்கள் 
கொடுத்து பழகுங்கள் 
முத்தங்களை! 
---------------------------------------

 மௌனம் கலைந்து
ஓராயிரம் விருப்பங்கள் குவிந்தும் 
ஒன்றுமே எண்ணா வண்ணம் 
 அப்புறம் ? என்ற 
மிகச்சிறிய சொல்லுடன் 
உறைந்து விடுகின்றன நம் 
உள்ளக்கிடக்கைகளும்..
உரையாடல்களும்..  


நன்றி !!
 'முத்தக்கவிதைகள்' என்னும் தலைப்பில் காட்சி வலைப்பூ வெளியிட்ட பதிவு

Related Posts Plugin for WordPress, Blogger...