Monday, January 18, 2010

கிராமத்து பொங்கல்






பிறந்ததில் இருந்து நகரத்திலேயே இருந்து, கிராமத்து பொங்கல் விழா எப்படி இருக்கும் என்றே தெரியாத மச்சான்ஸ்-களுக்காக இந்த பொங்கல் பதிவு.
(நமக்கு பொங்கல்னாலே ஒரு புதுப்படம், சக்கரை பொங்கல், கரும்பு மற்றும் டி.வி நிகழ்ச்சிகள் இவ்வளவுதான் தெரியும்).

தஞ்சாவூர் மாவட்டத்தில இருக்குற பேராவூரணி வட்டத்தில் கொண்டாடப்படும் பொங்கலை பார்ப்போம்.
பொங்கல் அன்று ஒவ்வொரு வீட்டுலயும் வாசலில் அடுப்பு வெட்டி பானைல பொங்கல் வைப்பாங்க, இதை அந்த ஊர் வட்டார வழக்குப்படி "கோடு கிழித்து பொங்கல் வைத்தல்" ன்னு சொல்றாங்க. படத்த பார்த்தீங்கனா ஏன் இந்த பெயர் அப்படின்னு உங்களுக்கே புரியும். பானைங்குறது இந்த ஏரியாவுல காலப்போக்கில் வெண்கல பாத்திரமா மாறிடுச்சு.








அடுப்பின் ஒவ்வொரு முனையிலும் ஒரு வெண்கல பானை. ஒன்னு வெண் பொங்கலுக்கு இன்னோன்னு சக்கரை பொங்கலுக்கு. அடுப்பு வெட்டுவதிலும் ஒரு சம்பிரதாயம் உண்டு, முன் வாசலில் இருந்து கிழக்கு பக்கம் ஒரு இரண்டு தூரத்தில் அடுப்பை வெட்ட வேண்டும். சூடனை கொழுத்தி அடுப்பை பற்ற வைத்துவிட்டு, விறகு சுள்ளி தென்னை மட்டை அப்புறம் இன்ன பிற ஐட்டங்களை எல்லாம் போட்டு அடுப்பை நன்றாக எரிக்கணும்.

முதலில் பொங்க பானையில் தண்ணி மட்டும்தான், தண்ணி நல்லா சூடு ஏறின பிறகுதான் ரெண்டு பாணியிலும் அரிசியை போட வேண்டும். அப்படியே ரெண்டு பொங்கலுக்கும் வேணுங்கிற பொருள் எல்லாம் சேர்த்து அடுப்பை நன்றாக எரியவிட்டால், பொங்க பொங்க பொங்கல் ரெடி. ரெண்டு பானையையும் அடுப்பில் இருந்து இறக்கி, கரி எல்லாம் கழுவி சுத்தம் செய்து, விபூதி குங்குமம் பூ எல்லாம் வைத்து அலங்கரிக்கணும்.

அப்புறம் வீட்டு வாசல்ல நல்லா ஒரு கலர் கோலம் போட்டு, நடுவுல பூ வச்ச சான பிள்ளையாரையும் செஞ்சு வைச்சிடணும். அப்படியே ஒரு கரும்பு, அப்புறம் மற்ற பூஜை ஐட்டம்ஸ் எல்லாத்தையும் வச்சு சாமி கும்புடுவாங்க. இதுதான் முதல் நாள் பொங்கல் விழா. 





பொங்கல் அன்று பகல் முழுவதும் சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடக்கும், அப்படியே பெரியவர்களுக்கும் கைப்பந்து, கபடி, சுருட்டு பிடித்தல் போன்ற போட்டிகளும் நடக்கும். அன்று இரவு ஊர் போது மேடையில் சிறுவர்களுக்கு பாட்டு போட்டி, கவிதை போட்டி, மாறுவேட போட்டி, நடன போட்டி ஆகியவையும் நடைபெறும். அப்படியே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே போது அறிவு போட்டியும் நடத்தப்படும். நம்ம ஊர்ல அன்னக்கி ராத்திரி ஹைலைட்டே இந்த நடன போட்டிதான் (நண்டு சிண்டு எல்லாம் போட்டி போட்டு ஆடும்). இந்த போட்டிகள் பரிசுகள் அனைத்தையும் ஊர் இளைஞர் மன்றம் பார்த்துக்குவாங்க...
(கொசுறு : இதே நேரத்தில் சுற்று வட்டாரத்துல உள்ள சில ஊர்களில் கரகாட்டம் நடத்தப்படுவதும் உண்டு...)


இரண்டாம் நாள் - மாட்டு பொங்கல்.

இன்னக்கி கொஞ்சம் கூடுதல் விஷேசம் மச்சான்ஸ். முதல் நாளில் தனி தனியா பொங்கல் வச்ச நம்ம மக்கள்ஸ், இன்னக்கி எல்லாரும் பொதுவா ஒரு எடத்தில கூடி மாட்டு பொங்கல் வைப்பாங்க.

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் அவங்களுட மாடுகளை குளிப்பாட்டி அலங்காரம் செஞ்சு ஊருக்கு பொதுவான ஒரு இடத்துக்கு (அநேக இடங்களில் மைதானம்) கொண்டு வந்துடுவாங்க. அப்படியே மீண்டும் ஒரு பொங்கல் மாடுகளுக்காக. மாடுகளை எல்லாம் ஒரு பக்கம் கட்டி வைத்து விட்டு, எல்லாருக்கும் பொதுவாய் ஒரு அடுப்பை வெட்டி பொங்கல்(இன்று வெண்பொங்கல் மட்டும்தான்) வைக்க ஆரமபிச்சுடுவாங்க.

பெண்கள் எல்லாம் ஒரு பக்கம் இந்த வேலைகள பார்க்க இன்னொரு பக்கம் ஆண்கள் பொங்கல் தயார் செய்வதற்கான மற்ற ஐட்டங்கள ரெடி பண்ணுவாங்க. (தேங்காய் துருவுதல், பழங்கள் நறுக்குவது, பேரீச்சை, வெல்லம்). அதே நேரத்தில் மைதானத்தின் நடுவில் மண்ணால் தயார் செய்யப்பட்ட ஒரு சாமியும் உருவாக்கப்படும்.

பொங்கல் எல்லாம் தயார் ஆனாவுடன், எல்லாரும் அவர் அவர் பானைகளை அலங்கரித்து சாமி முன்னால் படைத்து விடுவர். பின்னர் பூஜை ஆரம்பிக்கும். முதலில் படையல். சாமியின் முன்னாள் நிறைய வாழை இலைகள் போட்டு ஒரு மேடை போல் அமைக்கப்படும். ஒவ்வொரு பானையில் இருந்தும் பொங்கல் எடுத்து இலையில் போடப்படும். அப்படியே பானையில் இருந்து எடுக்கும்போது இடையிடையே தேங்காய் துருவல், வெல்லம், வாழைப்பழம், நெய், பால், தயிர், தேன் ஆகியவையும் சேர்க்கப்படும். இறுதியில் எல்லாம் கலக்கப்பட்டு கலவையாய் மாட்டு பொங்கல் ரெடி. சாமிக்கு படைத்தவுடன், கொஞ்சம் சாதம் எடுத்து அனைவரும் அவர் அவர் மாடுகளுக்கு ஊட்டிவிடுவர். 







அப்புறம் பூஜை. ஒரு மண்சட்டியில் நெருப்பு, இன்னொன்றில் தண்ணி எடுத்து இருவர் மைதானத்தை "பொங்கலோ பொங்கல்" என்று கூவிய படியே மூன்று சுற்று வருவர். சுற்றி முடித்தவுடன் அப்படியே சிறார்களுடன் ஊரின் எல்லைக்கு ஊர்வலமாய் சென்று இரண்டு சட்டிகளையும் போட்டு உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். அவர்கள் வந்து சேர்ந்ததும் பொங்கல் அனைவருக்கும் பங்களித்து தரப்படும். இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் ஓவர்.
மூன்றாம் நாள் மாடுகளை அலங்கரித்து, மாடு விடுதல் நடத்தப்படும்.

அப்படியே கூட்டம் கூடி பூஜைக்கு ஆனா செலவுகள் பற்றியும் விவாதித்துவிட்டு கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்பட்டு எழுதப்படும்.

இனி அடுத்த வருஷம் கொண்டாட காசு எப்படி திரட்டுவாங்கன்னு பார்ப்போம்.

இந்த வருஷ செலவுகள் போக மூவாயிரம் ரூபாய் மிச்சம் இருக்குதுன்னு வச்சுக்கங்க, அந்த காசு பத்து முன்னூறு ரூபாய்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படும். ஏலத்திற்கு வரும் ஒவ்வொரு தொகையும்(300) ஒரு கணிசமான அமௌன்ட்டுக்கு ஏலம் போகும். (300 ரூபாய் காசு, 600-800 வரை ஏலம் போகும்). ஏலம் எடுத்த ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் வழங்கப்படும்.

அடுத்த வருஷம் பூஜையின் போது இந்த முன்னூறுக்கு பதில் ஏலம் எடுத்த தொகையை செலுத்தி விட வேண்டும். ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை, அனைவரும் ஒரு முறையாவது ஏலம் எடுத்திருக்க வேண்டும். அதே போல் சில வருடங்களுக்கு ஒரு முறை கையிருப்பு பணம் கூடும்போது, அவர் அவர் ஏலம் எடுத்த தொகையை பொருத்து கூடுதல் பணம் பங்களித்து தரப்படும். இப்ப அடுத்த பொங்கல் பூஜைக்கு பொங்கல் பணம் தயார் !!!


15 comments:

  1. கிராமத்துலதான் பொங்கல் விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. நம்மப் பக்கம் எல்லாம் நல்லாத் துன்னுட்டு, சன் டிவி, கலைஞர் டிவி ன்னு எல்லா ஜனமும் குந்திடும். விருந்தாளி வந்தாக் கூட கண்டுக்க மாட்டாங்க.

    ReplyDelete
  2. படங்கள் அருமையோ அருமை. ரொம்ப நன்றிங்க. பதிவும் நல்லா இருக்கு. பொங்கலோ பொங்கல்!

    ReplyDelete
  3. இதே சேம் நிகழ்வுகள் நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் தொடர்ச்சியா ரெண்டாவது வருசம் மிஸ் பண்ணிட்டேன் மச்சான்...

    :(

    ReplyDelete
  4. ஊருக்கே போய் பொங்கல் கொண்டாடிட்டு வந்த உணர்வு மச்சான்....உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  5. பேராவூரணி கிராமத்துப் பொங்கல் முறை வித்தியாசகமாக இருக்கிறது.

    விரிவான பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. உயிர்ப்புடன் கூடிய பொங்கலை வழங்கியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. @கும்மாச்சி - ஆமாங்க மச்சான்...இப்பெல்லாம் யாரு பண்டிகைக்கு வெளில வர்றாங்க..அதுவும் முக்கியம்மா பெண்கள், வீட்டுக்குள்ளே டி.வி பொட்டிய கட்டிக்கிட்டு இருக்காங்க...

    ReplyDelete
  8. ரொம்ப நன்றி சித்ரா மேடம்...படங்கள் நம்ம சொந்த முயற்சி.. :)

    ReplyDelete
  9. @பிரியமுடன்...வசந்த் - சேம் பின்ச் மச்சான்....நானும் ரெண்டு வருஷமா பொங்கலுக்கு போகலை... அதான் இந்த வருஷம் ஒரு வாரம் லீவு போட்டுட்டு கிளம்பியாச்சு...
    விடுங்க விடுங்க அடுத்த வருஷம் போய்க்கிடலாம்...
    :)

    ReplyDelete
  10. @seemangani - ரொம்ப நன்றி மச்சான்...ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு சோசியல் சர்விஸ்... :)

    ReplyDelete
  11. ரொம்ப நன்றி சங்ககவி - நமக்கு தெரிஞ்சதெல்லாம் பட்டன் அமுக்குறது தான்....

    ReplyDelete
  12. உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி மாதேவி...
    - மச்சான்ஸ்.

    ReplyDelete
  13. ரொம்ப நன்றி அனானி மச்சான்...

    ReplyDelete
  14. சிவன் அட்டகாசம் போங்கள். அடியேன் நெடுவாசல்

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...