
சில சிற்றின்பங்களை எல்லாம் காதல் என்று வகைப்படுத்தினால், இதுதான் உலகத்தின் மிகச்சிறிய காதல் கதை. நொடிப்பொழிதில் மொட்டு விட்டு, மலர்ந்து, மணம் வீசி, உலர்ந்து, கருகி பின்னர் மறைந்தும் போனது.
அந்த காதல் சம்பவம் நான் கல்லூரியில் படித்த கொண்டிருந்தபோது நடந்தது
செமஸ்டருக்கு ஒரு முறை ஐ.வி. (INDUSTRIAL VISIT-னு சொல்வாங்க) போறது வழக்கம். மூன்றாவது வருஷம் படிச்சிட்டு இருக்கும்போது ஸ்ரீ ஹரிக்கோட்டாவுக்கு போக அனுமதி கெடச்சது. தனியா பஸ் வாடகைக்கு எடுத்துட்டு காலைல நாலு மணிக்கு கெளம்பினோம். ஐ.வி எல்லாம் முடிச்சிட்டு திரும்பி சென்னை வரும்போது சாயாந்திரம் மணி ஆறு.
பஸ்ஸ நேரா மெரினா பீச்சுக்கு விட்டாரு டிரைவர் அண்ணன்.(அங்கதான் சிட்டிக்குள்ள பார்கிங் ப்ராப்ளம் கிடையாது)..அங்க இருந்து ஒரு எட்டு மணிக்கு கெளம்பலாம்னு முடிவு செஞ்சு எல்லாரும் குரூப் குரூப்பா பிரிஞ்சு பீச்சுக்கு போனோம்....(எங்க குரூப்ல எல்லாமே சேவல்தாங்க ) ரெண்டு மணி நேரம் கழித்து பஸ்சுக்கு போகலாம்னு பீச்லேர்ந்து பஸ்ஸ நோக்கி நடந்திட்டு இருந்தோம்...என் கூட ஒரு நாலைந்து நண்பர்கள்...
அப்போ மெரீனா பீச்ல கடைகள் ரெண்டு தெரு போல் அமைக்கப்பட்டிருந்திச்சு. ஒரு தெருவின் வழியா நாங்க ஒவ்வொரு கடையா மேஞ்சுட்டு போயிட்டு இருந்தோம். அப்போதைக்கு எங்களோட குலத்தொழிலே மேய்தல் தான் (அதுல சாப்பிடுறது பாக்குறது ரெண்டுமே அடக்கம்).
(இதோ ஆரம்பம் என் குட்டி காதல்(?) கதை.)
எனக்கொரு கெட்ட பழக்கம் உண்டு ....யாரையாவது பார்த்தா அவங்களா பார்வையை திருப்புற வரைக்கும் அவங்கள பாத்திட்டு இருப்பேன்... உடனே பார்வையை திருப்பிட்டு போய்டுவாங்க..... இதுவரை எல்லாரும் அப்படித்தான்.
இன்றும் அப்படிதான், நான் நிறைய பேர பாத்துட்டே நடந்து கொண்டிருக்கும்போது,
என்னையும் மீறி(?) ஒரு மையலில் என் பார்வை நிலை கொண்டது... எதிர் திசையில், எனக்கு சில அடி தூரத்தில் பக்கத்து கடைவரிசையில் ஒரு யுவதி....அவள் தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள்....
வீஷேசம் யாதெனில் நான் நோக்கிய அதே சமயம், அந்த அழகிய இரு கரு விழிகளும் இங்கு யாமிருக்கும் இடம் நோக்கி நிலை கொண்டது. இருவருமே பார்வையை திருப்பவில்லை. அவ்வளவு வசீகரமான அந்த முகம் என்னை இமை கொட்டாமல் பார்க்க வைத்தது. கால்கள் மட்டும் நடப்பதை நிறுத்தவில்லை...
எதிர் எதிர் திசையில் இப்போது இருவரும் நெருங்கி கொண்டிருந்தோம். என் பார்வை எல்லாம் அவள் மீது மட்டும்தான் படர்ந்திருந்தது. என்னுடன் என் நண்பர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை
இருவரும் ஒருவரை ஒருவர கடக்கும்போதும் பார்த்துக்கொண்டேதான் கடந்தோம்....கடந்த பின்னும் அவளை பார்த்துக்கொண்டேதான் நடந்தேன்...அப்பொழுது எனக்கு வேறெதுவுமே தோன்றவில்லை. உலகமே அவளது இரு விழிகளுக்குள் அடங்கியிருந்தன... அங்கேயும், சிறிதும் சலனமின்றி அவளும் என்னை போலவே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்நொடியில் என் நினைவில் எதுவுமே இல்லை...அவள் விழிகளை தவிர....
இவை அனைத்தையும் என் நண்பனொருவன் கவனித்து விட... டக்குன்னு என்ன தட்டி,
“என்னடா நடக்குது இங்க - என்ன மச்சி தெரிஞ்ச பொண்ணா ..”
“ஊஹூம் ”
“அப்ப யாருடா அது..”
“தெரியல..”
இப்போதும் பேசிய படியே திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தேன்... அங்கேயும் அப்படிதான்...
அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே நடந்தவையை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது...மெதுவாய் புன்னகைத்துக்கொண்டே மீண்டும் பாத்தேன்....என் சிரிப்பு அந்த யுவதியையும் தொற்றியது..அவளும் சிரித்தாள்...அழகாய் சிரித்தாள்...
அவள் சிரித்ததை கண்டவுடன், என் சிரிப்பு மேலும் கூடியது....இருவரும் இப்போது புன்னகைத்து கொண்டிருந்தோம்...
இந்த நேரத்தில் நாங்கள் எதிர் எதிர் திசையில் சிறிது அதிக தூராத்தில் விலகி இருந்தோம்... நடப்பதை தான் நாங்கள் நிறுத்தவே இல்லையே...
உற்சாகத்தில் என் நண்பன் “ கையை காமிடா ..” என்றான். அவன் சொன்னவுடன் சிறிதும் தாமதிக்காமல் கைய்யை தூக்கி டாட்டா காட்டுவது போல் சைகை செய்தேன்......
முதல் நொடி மௌனம்...
அந்த யுவதி அமைதியானாள்...
இரண்டாம் நொடியும் கடந்தது...
பதிலும் இல்லை, பார்க்கவும் இல்லை...
தப்பாக ஏதும் செய்து விட்டோமோ என்று ஒரு நிமிடம் தோன்றியது.... மெரினாவே மயான அமைதியில் இருப்பது போல் தோன்றியது...
அரைநொடி பொழுதில் சோகம் என் முகத்தில் இருளை பூசியது.... அவ்வளவுதான் என்று நினைக்க முற்ப்பட்டபோது ... அவள் என்னை நோக்கி தன் கையை அசைத்தால் ....டக்கென்று உற்சாகம் எங்களுக்குள் மீண்டும் குடி கொண்டது ...என் நண்பர்கள் அனைவரும் ஒரு சின்ன வெற்றி கூச்சலே இட்டனர்..!!!
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே... எங்கள் பார்வையின் நடுவில் மக்கள் அதிகமாயினர், இருவரின் விழிகளும் மக்களோடு மக்களாய் மத்தியில் தொலைந்தது.... அந்த சின்ன வெற்றியே என் மனதை முழுதாய் ஆட்கொண்டிருந்தது.. அப்போதைக்கு வேறேதும் செய்யவும் என் மனதில் தோன்றவில்லை... உலகையே மறந்தவனாய் அந்த விழிகளின் மௌன ஈர்ப்பையே நினைத்துக் கொண்டிருந்தேன்....
.
.
.
.
.
“ அய்யோ அவளை நான் விட்டு விட்டேனே என்று எனக்கு உறைத்த போது எங்கள் பஸ் தாம்பரத்தை நெருங்கி கொண்டிருந்தது “
அந்த கதை அன்றோடு முடிந்தது....நினைவுகள் மட்டும் என்னிடம்....
இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையில் நான் விவரித்திருக்கிறேன்.... இதை நீங்கள் " முட்டாள்தனம்", " பிதற்றல்", வெறும் சிற்றின்பம்" " எதிர்பால் ஈர்ப்பு" என்று எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளுங்கள்.
“இவை எல்லாமே காதலின் துணைஎழுத்துதான் ”