Wednesday, May 5, 2010

தமிழின் டாப் 5 பேய் படங்கள்.


தமிழில் வெளியான சிறந்த (திகிலூட்டிய, அடிவயிற்றை கலங்கடித்த, பயமுறுத்திய, கால்சட்டையை ஈரமாக்கிய ) ஐந்து பேய் படங்களை வரிசைப்படுத்ததான் இந்த பதிவு.



இப்படி ஒரு பதிவு எழுதலாம்னு தேட ஆரம்பிச்ச பிறகுதான் நம்ம மர-மண்டைக்கு ஒரு உண்மை எட்டியது. தமிழ்ல வந்த நல்ல பேய் படங்களின் மொத்த எண்ணிக்கையே ஒரு பத்துதான் என்று. திரில்லர் படங்களை இந்த ஆட்டத்துக்கு நாங்க சேர்த்துக்கலை. ஒன் அண்ட் ஒன்லி பிசாசு படங்கள்.  :)

டாப் - 5 படங்களை பார்க்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட தவறவிட்ட மத்த படங்களை பார்ப்போம்.

ஷாக் - பிரசாந்த், மீனா நடிப்பில் வெளி வந்த படம், பூட்(BHOOT) என்ற ஹிந்தி படத்தின் ஈயடிச்சான் காப்பி. சில காட்சிகள் லைட்டா (??) பயமுறுத்தினாலும், மொத்தமா பார்க்கும்போது படம் கொஞ்சம் சுமார் தான்.

ஷாக் - கரண்ட் கட்.


அது - நம்ம ஹோம்லி நாயகி சினேகா நடித்து -வெளிவந்த திரைப்படம். (இப்படியெல்லாம் படம் வந்ததான்னு கேக்கப்புடாது). இதுவும் தி ஐ(THE EYE) என்ற திரைப்படத்தின் தழுவல் (இங்க பேய் படங்களுக்கு ஐடியா பஞ்சமோ?).



சிவி - இந்த படத்தில் பயமுறுத்தும் பேய் காட்சிகள் ரொம்ப கிடையாது, ஆனா பேய் பழி வாங்கும் கதை. இந்த படமும் ஷட்டர் என்கிற திரைப்படத்தின் தழுவல்.


நெஞ்சம் மறப்பதில்லை - கொஞ்சம், இல்ல இல்ல ரொம்ப பழைய படம். ப்ளாக் அண்ட் வொய்ட் பிலிம். பேய், ஆவி, பூர்வ ஜென்மம் என்று கலந்தடித்து பார்ப்பவர்களின் இதயத்தை

கலங்கடித்த திகில் திரைப்படம். கொடூர ஒப்பனை கிடையாது, பயமுறுத்தும் அசிங்கமான பேய்கள் கிடையாது, இருந்தாலும் அந்த ஜாமீன் பங்களாவை  காட்டும் ஒவ்வொரு

நிமிடமும் திக் திக் பகீர் பகீர். நம்பியார் ஒரு பாதியில் பேசி மிரட்டுவார், இன்னொரு பாதியில் பேசாமலேயே மிரட்டி இருப்பார்.

இந்த சூப்பர் படத்தை நம்ம லிஸ்ட்டுல சேர்ப்பதா இல்லையா என்று ஒரு குழப்பம்...அதனால இந்த படத்துக்கு சிறப்பு பரிசு (நம்ம வாழ்நாள் சாதனையாளர் விருது மாதிரி) – SPECIAL MENTION.

இந்த படங்களை தவிர்த்து வா அருகில் வா, அந்தி வரும் நேரம், அமாவாசை இரவு, ராசாத்தி (சம்திங்), யார் (இந்த படம் நல்லா இருக்கும் , அனால் சாமிக்கும் பேய்க்கும் சண்டை என்பதுபோல் தடம் maarividum, மற்றபடி இதுவும் ஒரு சூப்பர் படம்)...etc போன்ற நல்ல பேய் படங்களும் உண்டு, என்ன டாப் ஐந்தில் இடம் பெறவில்லை.

இனி நம்ம டாப் -5 படங்கள்.



இந்த படங்களுக்கு எல்லாம் அறிமுகமே தேவை இல்லை. இருந்தாலும் ஆங்காங்கே சில கொசுறு செய்திகள் .

இந்த படங்களை எல்லாம் வரிசைப் படுத்தவில்லை மச்சான்ஸ், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் வெளிவந்து கலக்கிய (வயிற்றைத்தான்) திரைப்படங்கள்.

யாவரும் நலம்(2009).




ஒரே நேரத்தில் ஹிந்தி (13B), தமிழ் என்று இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற திரைப்படம். பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். மனுஷன் மிக்ஸிக்குள்ள  எல்லாம் கேமாராவ வச்சு எடுத்திருப்பார்.
இன்னொரு விஷயம், நெக்ஸ்ட் பார்ட் எடுக்க பிளான் பண்ணிட்டு இருக்காங்கலாம்.

டைரக்டர் விக்ரம் குமார் இயக்கம்.வழக்கமான பேய்  படங்கள் போல் அல்லாமல் கடைசி வரை மர்மத்தின் முடிச்சை அவிழ்க்காமல் காட்சிகளை வைத்தே பயமுறுத்திய படம். அதனாலநம்ம லிஸ்ட்டுல இந்த படத்துக்கு ஒரு இடம்.ஷங்கர் எஹ்சான் லாய்-இன் பின்னணி இசை,பக்கபலம்.

பதிமூனாம் நம்பர் வீடு(1990).



டைரக்டர் : பேபி
நடிகர்கள் : நிழல்கள் ரவி, ஜெய்ஷங்கர், ஸ்ரீப்ரியா,

இந்த படத்த நான் நாலாவது படிக்கும்போது பார்த்ததா ஞாபகம். ரொம்ப கஷ்டப்பட்டு ஒளிஞ்சிக்குட்டே பார்த்தேன் (அவமானம்). படம் நார்மலா போயிட்டு இருக்கும் திடீர் திடீர்னு ஒரு அதி பயங்கரமான பேய் முகத்த காண்பிச்சு டரியல் ஆக்கிடுவாங்க. ஆரம்பத்தில ஒரு பெய்ண்டிங் சீன் வருமே அது சீனு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த படத்த பார்க்கும்போது நாங்க தங்கியிருந்த வீட்டோட நம்பரும் பதிமூனுதான்.


மை டியர் லிசா. (1987)








டைரக்டர் : பேபி
இசை : கங்கை அமரன்.
நடிகர்கள் : நிழல்கள் ரவி, சாதனா.
ஒளிப்பதிவு : நிவாஸ்.

இந்த படத்திற்கும் அறிமுகமே தேவை இல்லை, பார்த்தவங்கள் கேளுங்க, பயந்த கதையை பக்கம் பக்கமா சொல்வாங்க.


ஜென்ம நட்சத்திரம் (1980s).


நடிகர்கள் : பிரமோத், சிந்துஜா, நாசர்.
டைரக்டர் : தக்காளி ஸ்ரீனிவாசன்.


ஆங்கிலத்தில் வந்த ஓமன் படத்தின் தமிழாக்கம், இங்கயும் சும்மா மெரட்டி இருப்பாங்க.  அதுவும் அந்த ஆயா ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே போதும், எதுக்கு கீழயோ சூன்யம் வச்சா மாதிரியே இருக்கும். அந்த குட்டி பையனும் செம டெரரு. ம்யூசிக்கும் பயங்கரமாஇருக்கும்.


உருவம் (1991)


டைரக்டர் : ஜி.எம்.குமார்.
நடிகர்கள் : மோகன், விஸ்வம், பல்லவி.

இதுதான் மச்சான்ஸ் தரவரிசையில் டாப் ரேட்டட் படம். கடைசியில் மோகன் வரும் காட்சிகள் எல்லாம் செம க்ரிப்பிங். மோகன் சொந்த குரலில் பேசிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று. கடற்கரையில் பட்ட பகலில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கூட மிரட்டியிருக்கும். இது கண்டிப்பா பார்க்கவேண்டிய படம். நாலஞ்சு பேர துணைக்கு வச்சுக்கிட்டு இந்த படங்களை எல்லாம் பாருங்க மச்சான்ஸ்.

----------------------------------------------------------------------------------------
எங்க ஜகன்மோகினி படத்த லிஸ்ட்டுல காணும்னு கேக்குற மச்சான்ஸ் எல்லாருக்கும், மச்சான்ஸ் விமர்சன குழு சார்பாக ஒரு சுறா பட டிக்கட் பரிசு.
----------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாள் முன்னாடி போடப்பட்ட டாப்-5 போலீஸ் படங்களின் லிங்க் இங்கே.

                     - இப்படிக்கு மச்சான்ஸ் விமர்சன குழு
                                       (விகடன் விமர்சன குழுவின் கஸின் பிரதர்ஸ்.)


Wednesday, April 28, 2010

"பொய்"யெனப் பெய்யும் மழை !!

மழை பெய்ஞ்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு ...
ரொம்ப நேரம் மழை பெய்த பிறகு, தட் தட் னு எங்கயாவது மிச்சமா இருக்கிற தண்ணி சொட்டி கிட்டு இருக்கும்.. அந்த மாதிரி இருக்கிற சில நினைவுகள் இங்க தெளிக்கப்படுகிறது  ...

அவளுக்கு இன்னும் நாலு நாள், இல்ல இன்னும் சரியா 93 மணி நேரத்துல சுப முகுர்த்தம்! 
என்னடா கிளைமாக்ஸ் சொல்லிட்டு கதை ஸ்டார்ட் பண்றான்..?? இரு, மச்சி ட்விஸ்ட் எங்க வேணும்னாலும் இருக்கலாம். 

ஸ்டார்ட் ..கேமரா ..1..2..3..
சின்ன வயசில கணக்கு நல்லா படிப்பேன், வளர வளர ரொம்ப சுமார் ரகம் தான் . சக மாணவர்கள் எல்லோரும் maths tuition போய் தீவிரமா படிச்சிட்ருந்தாங்க ..அப்படி ஒருத்தன் தான் ராகவன்  ..நம்ம நெருங்கின தோஸ்து ! இந்த கதைல ரொம்ப முக்கியமான கேரக்டரு. பதினோராம் வகுப்பு, ஒரு சாயங்காலம் , நான், தமிழரசன்ராகவன்  எல்லாம் மொக்கை போட்டுட்டு இருந்தோம். அப்போ ராகவன் , "மச்சி இன்னைக்கு ஒரு பொண்ணு வீட்டுக்கு போறேன் , மேக்ஸ் நோட்டு வாங்க, நீங்க ரெண்டு பெரும் வாங்கடா  என்னோட ". நான் , " மச்சி என்னடா சொல்ற ?!? LKG லேர்ந்து பாய்ஸ் ஸ்கூல் தானடா இருக்கோம் ..எப்படா பிகரு பழக்கம் வந்துச்சி ?",  ராகவன் , "அதான் சொன்னேன்ல  மச்சி, கிளாஸ் டீச்சர்  கிட்ட tuition போறேன், அங்க தெரியும், Cluny பொண்ணு மச்சி , செம கட்டை ".
தமிழரசன், "மாமா  scenu டா , என்னடா சொல்றே, நெசமா அவ வீட்டுக்கு போறியா? " ராகவன், " டேய் முட்டை ,நானும் இது வரைக்கும் பிகரு வீட்டுக்கு போனதில்லை , அதான் வாங்கடா , மூணு பேரும் போவலாம் .." , நான் அபசகுனமாய் ." டேய் விளையாடாதடா, நாங்க வரலை , நீ வேணும் நா போயிட்டு வா ..
என் வாழ்க்கையோட மிக முக்கியமான தருணம் அது ! ஆனா சின்ன வயசிலேர்ந்து பொண்ணுங்க கூட பேசாமலே வளர்ந்துட்ட எனக்கு , அப்போ, போக வேணாம் , என்ற எண்ணமே அதிகமா இருந்துச்சி ..
ஒரு வழியா மூணு பேரும், போய் அவளைப் பார்த்தோம்..நல்லா இருந்தா ! அப்புறம் தமிழரசன்  , அவசர வேலைனு கிளம்பி போய்ட்டான். நாங்களும் கிளம்பினோம், ராகவன் பைக் ஸ்டார்ட் பண்றப்போ , அவ வந்து , நீ இனியா  வீட்டுக்கு போகலை ? என்றாள். நாங்க முழிச்சோம். அவ பக்கத்துக்கு  வீடு தான் என்று கை காட்டினாள்.   "அப்படியா ? அவ tuition ல சொன்னதே இல்ல..", சரி நான் பார்த்துட்டு போறேன் என்றான். 
நான், அவனை பார்த்து , மாப்ளே நீ பெரிய ஆளு தான், ஒத்துகிறேன் ...
ஆனா நேரமாச்சு மழை வேற வர்ற மாதிரி இருக்கு ,இந்த நேரத்துல இன்னொரு பொண்ணு வீட்டுக்கு போறது சரில்லை, வா கிளம்பலாம், என்றேன். அவன் மச்சான் , 5 நிமிஷம் , "Hi" சொல்லிட்டு உடனே கிளம்பிடலாம்.  
அவளைப்பார்த்த முதல் நாள் :   
இரவு 8.30; அக்டோபர் ,2002 ; அவள் வீட்டுச்சந்து;  
நான் அவ  வீடு எதிரில் பைக்கிட்ட நின்னுட்டு இருந்தேன். முதல் தடவை, வீட்டுக்கு பையன் ,அதுவும் ராத்திரி நேரம் வந்திருக்கான். சற்றே பதற்றமாய் இருந்த இனியாவிடம்  , வீட்டு வாசலில் நின்று ராகவன் பேசிக் 
கிட்டு இருந்தான்.அவங்க குடும்பமே பக்கத்துல நின்னுகிட்டு இருந்துச்சி. அப்போ தான் அவளைப்பார்த்தேன், சட்டென நெஞ்சு வலி ..இல்ல அட ஏதோ சொல்லுவாங்களே ..ஆங் இதயத்துல ஏதோ நெருடல்..நெஞ்சுல கை வச்சேன்,சட்டை ஈரமா இருந்துச்சி ..கடவுளே! அவ்ளோ வழிஞ்சிட்டேனா ?!? அடடா மழை ..! ( உடனே பையா சாங் வேணாம், சின்ன கிறுக்கல் போதும்)
 " நான் உன்னை 
முதன்முதலாய் 
பார்த்த 
மழைக்கோர்த்த
அந்த இரவு! 
என்னுள் இன்னும் விடியவே இல்லை ..

என் 
உயிர் நண்பனுடன் 
நீ பேசிக்கொண்டிருந்தாய் ..
ஓரமாய் 
உன்னை ரசித்தபடியே 
நான்! 
அன்று முதல் அவன்
'நண்பன்' ஆகிவிட்டான்..
உயிர் 
நீயாகி விட்டாய் !"

கடைசி சந்திப்பு :
********************
இரவு 8.30; டிசம்பர், 2009; வித்யா வீடு;

"என்ன வித்யா , அவ எப்போ வருவா ?"
நீ வந்து 10 நிமிஷம் தான் ஆச்சு, 7 தடவை கேட்டுட்டே; அப்போ நீ என்னைப் பார்க்க வரலை ? 
ஹ ஹ ஆஹா ..சரி பீல் பண்ணாத விடு , நண்பன் பார்த்திபன் என்னை பார்க்க பெங்களூர் லேர்ந்து வந்திருக்கான், அவனை பீச்ல விட்டுட்டு வந்திருக்கேன் ..எதுக்காக ? உனக்காகவும் , இனியாவுக்கும்  தான்..

படிக்கட்டில் அவள் பேச்சு சத்தம், காதில் தேனாகப் பாய்ந்தது. 
வந்துட்டா  , உன் ஆளு ,என்று நக்கல் சிரிப்புடன் எழுந்தாள் வித்யா 

"ஹாய்", என்று அகன்ற சிரிப்புடன், தாவிச்சென்று கட்டி கொண்டாள், என்னை இல்ல , வித்யாவின் அண்ணி குழந்தையை!
அதனைக் கொஞ்சியபடியே வந்து , எப்படி இருக்கே ? என்று கண் சிமிட்டினாள். 
இடையே வித்யா , குழந்தையிடம் , இனியாவை காமித்து , "அக்கா சொல்லு , அக்கா சொல்லு" என்றாள்..அதுவும் மழலையாய் தடுமாறி , "அழ்கா" எனச்சிரித்தது.
நான், அதன் சிறு விரல்களைப்பிடித்து , என்னை காண்பித்து "மாமா சொல்லு , மாமா சொல்லு " என்றேன்..படு சுலபமாய் சொல்லி குதூகலித்தது! 

அவள் முறைத்தாள்! செல்லமா ? கோபமா ? அது தெரிய இன்னும் எட்டு வருஷம் பழகணும். 
செல்லமாய் முடியை கலைத்து, போடா என்றாள், (அப்டியே ஓபன் பண்ணா சுவிஸ் ல டூயட் !) 
"நீ 
நான் 
காதல்
இவற்றை ச் சுற்றியே 
சுழல்கிறது 
என் உலகம் ! "

இடைப்பட்ட எட்டு வருடங்கள் :
************************************
இடம் : சென்னை;கேரளா;புதுவை;பெங்களூர்;ஐரோப்பா;

1) முதல் சந்திப்பு - அடுத்த நாளே கணித வகுப்பு சேர்தல்! 
" அன்று கணித வகுப்பு 
புரிந்தும் புரியாதது 
போல் நடிக்கிறேன் 
உன்னிடம் ..
நீ கற்று கொடுத்த கணிதம் 
மூளையில் ஏறவில்லை..
நீ கற்று கொடுக்காமலே 
காதல் இதயத்தில் 
ஏறி விட்டது !"
2) காதல் தெரிவித்தல் - அவள் மறுத்தல் 
3) சோகம் - வகுப்பு செல்லா நோன்பு! 
4)  பனிரெண்டாம் பொதுத்தேர்வு - பொறி கலங்குதல் ;
" என் தமிழச்சியே !
கணித வகுப்பில் 
ஆங்கிலம் பேசி 
தாவரவியல் தேவதையாய்,
எனக்குள் 
வேதியல் மாற்றம் செய்து 
என் இதய பூகோளத்தில் 
உன் காதல் வரலாறு செதுக்கி,
இப்போது ,என்னை 
அறிவியல் அறியாத 
விலங்கியல் உயிரினமாய்  
உருமாற்றி விட்டாயே ..? " 
5)கல்லூரி : நான் பொறியியல் ; அவள் ஆங்கில இலக்கியம்;
6) நட்பும் , நட்பு சார்ந்த காலம். உபயம் : திரு . நோக்கியா 
7) அட ! அவள் காதல் தெரிவித்தல் - நான் வழிதல்.

மூன்று வார்த்தைகளைச் 
சொல்ல மூன்றரை வருடம் 
ஹ்ம்ம் ...
"காத்திருத்தல் " என்பதன் 
சுருக்கம் தான் 
"காதல்"
ஆனதோ ?
8) லட்சக்கணக்கான வார்த்தை ப்பரிமாற்றங்கள் - நன்றி ! குறுஞ்செய்திகளும் , குறைவான தொலைதூர அழைப்பு கட்டணங்களும்.
புது நண்பர்கள் :(
9) பணிச் சேர்தல் - அவள் மருத்துவமனை ; நான் கணிப்பொறி குப்பை கொட்டல் .. ( எவனோ ஒருவன்;அலைபாயுதே  ?? )
10) சந்திப்பு விகிதம் கவலைக்கிடம் - "அவள் பயம் + 1000 km"  இடைவெளியில் இரு மனங்கள்!
" காதலித்து பார்த்து 
கவலைகள் தெரியும் " என்பார் !
ஆனால்  எனக்கு 
காதலியை பார்ப்பதே 
கவலையாக உள்ளது.."
11) சிறு உரசல்கள்... 
12) கவிதை பதிவுப்பக்கம் உருவாக்கல் - பரிசளித்தல் - டம்மில் படிக்க தயக்கம் - ஐடியா தரைமட்டம்;
13) குறுஞ்செய்தி - " உனக்கு என்னை விட சிறந்த பெண் கிடைப்பாள்; எனது ஒரே குறிக்கோள் என் வீட்டாரை நலமுடன் வைத்தல்". 
14)நான்  மனசொடிதல் - அவள் பார்க்க மறுத்தல்; நான் காரணம் தெரியாமல் தவித்தல் 
15) மறுபடியும் நட்புக்காலம் ; உபயம் : திரு. ஜிமெயில்.
16) நான் அயல் நாடு செல்லல்; அவள் அப்படியே.

கடைசி கடுதாசி.. இல்ல லெட்டர்..இல்ல ஈமெயில் :
***********************************************************
மார்ச்; 2010;

"அயல்நாட்டில் நீ நலமாய் இருப்பாய் என்று தெரியும் (?!!?)
எனக்கு திருமணம் ..கேரளாவை சேர்ந்த சாப்ட்வேர் மாப்பிள்ளை ( நாங்கள்ளும் அதே ஆணிய த்தான்  புடுங்கிட்டு  இருந்தோம்?) 
அப்பாவுக்கு தெரிஞ்ச குடும்பம் ..அப்பாவுக்கு புடிச்சிருக்கு , எனக்கும் தான் ."
 நாள் :மே 2,  இடம் : கேரளா கோவில்."
  இப்படிக்கு 
  இனியா.

ஆங் ....சொல்ல மறந்துட்டேன் ..அவ மலையாளி , அடியேன் சுத்த தமிழன்.

இந்த மெயில் படிக்கும் போது, இங்க வகுப்பில யாரோ ஒரு வயசான இத்தாலி நாட்டு வாத்தியார் கத்திகிட்டு இருந்தார், "சர்வதேச கலாச்சாரம்" பாடம் நடந்து கிட்டு இருந்துச்சி.."யோவ், இன்னும் எங்க நாட்டுலே  இருக்கிற கலாச்சாரமே , எழவு புரியல ..நீ வேற ".. 
கண்ணெல்லாம் கலங்கி, சன்னல் வழியா பார்த்தேன் ..வெளியில சொட்டு சொட்டாய்..அது பேர் என்ன சொல்லுவாங்க..? "மழை " தானே ? 

சரி கதை முடிஞ்சிருச்சி ...
ட்விஸ்ட் ??  இன்னும் 91 மணி நேரம் இருக்கு,   9300 km; நடுவுல 3 பனிமலை, 1 எரிமலை இருக்கு . 
என்ன சொல்றீங்க ?? எனக்கு "விண்ணைத் தாண்டி வருவாயா" மேல நம்பிக்கை இருக்கு... :(
 "பொய்"யெனப் பெய்யும் மழை !!! 
டிஸ்கி :
இது என் சொந்த கதை இல்ல ..அப்படினு சொன்னா நம்பவா  போறீங்க..

----இன்னமும் மழைக்காதலன் ..அருண் !                                 












Friday, April 16, 2010

மாத்ரு பூமி – A Nation Without Women (2003)



விகடன் குட ப்ளாக் லிஸ்ட்டில் வெகு நாள் கழித்து மச்சான்ஸ்- இன்  பதிவு (மாத்ருபூமி). நன்றி மச்சான்ஸ்  :)


முதல் முறை இந்த படத்தை பத்தி கேள்வி பட்ட போது, இப்படியும் ஹிந்தியில் சினிமா எடுக்கிறார்களா என்றுதான் தோன்றியது. அதை விட பெரிய அதிர்ச்சி இந்த படத்தை பார்த்த போது ஏற்ப்படுத்தியது.

இவ்வளவு தைரியமாக இன்னமும் சினிமா எடுக்கிறார்களா ??. ஹிந்தியில் பண்டிட் குயின் படத்திற்கு பிறகு, இந்த படத்தை தான் மிக தைரியமாக எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லலாம்.

இந்த படத்தை பத்தி பார்க்குறதுக்கு முன்னாடி சில தகவல்களை உங்ககிட்ட பகிர்ந்த்துக்கிடணும் மச்சான்ஸ்

கடந்த இருபது வருடங்களில் மட்டும், கருவிலேயே அழிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - பத்து மில்லியனுக்கும் மேல். (சுமார் ஒரு கோடி). அதாவது 7300 நாட்களில் ஒரு கோடி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். கொஞ்சம் கணக்கு செய்தால்,ஒவ்வொரு நாளும் சராசரியாக 1370 கருக்கலைப்பு நடந்துள்ளது.

பதறாதீர்கள், இன்னொரு விஷயம். இவ்வாறாக அழிக்கப்படும் குழந்தைகளில் (1984இல் மட்டும்) பாம்பேயில் கொல்லப்பட்ட 8000 குழந்தைகளில் 7999 பெண் சிசு.
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய ஆய்வின் அறிக்கை படி இந்தியாவில் சுமார் ஐம்பது மில்லியன் பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர்...
ஆயிரம் ஆண்களுக்கு பெண்களின் விகிதம்.

1901 - 972
1911 - 964
1921 - 955
1931 - 950
1941 - 945
1951 - 946
1961 - 941
1971 - 930
1981 - 934
1991 - 927
2001 - 933
(2001 சென்சஸ் கணக்குப்படி....)

இந்த பெண் சிசுக்கொலைகளுக்கு முதல் மற்றும் முக்கிய காரணம் வரதட்சணை.

மேற்க்கூறியுள்ள இந்த விஷயங்கள் அனைத்தையும் மையமாக வைத்து 2001-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஹிந்தி திரைப்படம்தான் இந்த மாத்ருபூமி.


இந்தியாவின் எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தில் இருந்து தொடங்குகிறது கதை. குழந்தை பிறந்தவுடன் குதூகலிக்கும் குடும்பத்தினர், அது பெண் என்று தெரிந்தவுடன் வருத்தம் கொள்கின்றனர். அடுத்த நாளே ஊரார் முன்னிலையில் அந்த குழந்தை பால் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் முழுக வைத்து தந்தையின் கையாலேயே கொல்ல படுகிறது.



சில வருடங்கள் கழித்து கதை தொடர்கிறது...

ஆண்கள் ...ஆண்கள் ...ஆண்கள்....திடீரென்று எங்குமே பெண்கள் இல்லாமல் போய் விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில். தன் ஐந்து மகன்களுக்கும் பெண் தேடுகிறார் ஒரு தந்தை. அவருக்கு உதவியாக கோவில் பண்டிதர் ஒருத்தர். பண்டிதர் பல ஊர்களை சுற்றி வந்தும் ஒரு பெண்ணும் கிடைத்த பாடில்லை. கல்யாணத்திற்கு பெண் இல்லை என்றவுடன் ஏதோ கல்யாண வயதில் பெண் கிடைக்க வில்லை என்று நினைக்காதீர்கள்.
சிறுமி, குழந்தை , கிழவி என்று யாருமே இல்லாமல் போய் விடுகிறது.

இதற்க்கிடையே கவர்ச்சி நடனத்திற்கும் (பெண் போல் வேடமிட்டு ஆண்கள் ஆடும்), தொலைக்காட்சியில் கேசட் போட்டு காட்டப்படும் ஆபாசப் படத்திற்கும் (அதிலாவது பெண்களை பார்க்கலாம் என்றுதான்..) மக்கள் (சாரி ஆண்கள் ) கூட்டம் கூட்டமாக சென்று பார்ப்பதாக இருக்கிறது ஊர் நிலைமை.
பல குடும்பங்கள் பெண் தேடி அலைந்து கொண்டிருக்க, எவ்வளவு காசு கொடுத்தாவதும் பெண் பிடிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்கின்றனர் மக்கள்.

பண்டிதர் அங்கு இங்கு என்று அலைந்து கடைசியாக பல வருடங்களாக மறைத்து
வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை (கல்கி) கண்டு பிடித்து வருகிறார். தந்தையும் உடனே பணம் எல்லாம் தயார் செய்து கொண்டு பெண்ணின் வீட்டுக்கு புறப்படுகிறார். மகன்கள் யாரும் இல்லாததால், தன் இளைய மகனை(படித்து கொண்டிருப்பவர்) மட்டும் உடன் அழைத்து செல்கிறார்.

பெண்ணின் தந்தையிடம் பேசி ஒரு லட்சத்துக்கு பெண்ணை முடிக்க நினைக்கையில், பெண்ணின் தந்தை இளைய மகனுக்குத்தான் தன் பெண்ணை தருவேன் என்கிறார். கடைசியல் பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, பெண்ணின் தந்தைக்கு பண ஆசை காட்டி, ஐந்து மகன்களுக்கும் அந்த பெண்ணை பேசி முடிக்கின்றார். (கைமாறியது : ஐந்து லட்சம் பணம், ஐந்து மாடு).

ஐந்து பேருக்கும் சேர்த்து ஒன்றாய் கல்யாணம் நடக்க, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரவாய் ஐந்து இரவை சகோததர்கள் தமக்குள்ளே கல்கியை பங்கிட்டு கொள்கின்றனர். கடைசியில் இரண்டு இரவுகள் மிச்சமிருக்க, இவ்வளவு காசு கொடுத்து வாங்கியவள் இரண்டு இரவுகளை தனியாக கழிப்பதா என்று மூத்தவன் தான் அந்த இரண்டு தினங்களை எடுத்துக்கொள்வதாக சொல்ல, கோபம் கொள்ளும் தந்தை போட்டிக்கு வருகிறார். கடைசியில் தந்தைக்கும் வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்படுகிறது.





இப்படியாக நாட்கள் செல்ல, இளைய மகன் மட்டும் கல்க்கிக்கு அவ்வப்போது அவருக்கு உதவி செய்து அவரை புரிந்து கொள்கிறார். மற்றவர்கள் அனைவரும் அவளை ஒரு செக்ஸ் மெஷினாகவே பாவித்து ஒவ்வொரு இரவும் தனது அரிப்பை போக்கி கொள்ளவே பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் கடைசி மகனுடன் மட்டும் அவள் சந்தோஷமாக இருக்க, மற்ற அனைவருக்கும் அவன் மீது காண்டாகிறது..அவன் தந்தையார் உட்பட...

இந்த கோபத்தில் சகோததர்களே இளையவனை கொலையும் செய்துவிடுகின்றனர். கடும் துக்கத்தில் மூழ்கும் கல்கி தன் தந்தைக்கு யாருக்கும் தெரியாமல் ஒரு கடிதம் எழுதுகின்றார். கடிதத்தில் தன் மாமனாரும் தன்னுடன் உறவு கொள்வதையும் குறிப்பிட்டு எழுதி அனுப்புகிறார். கடிதம் கிடைத்து வரும் தந்தை தன்னை காப்பாற்றுவார் என்று கல்கி நினைக்க, தந்தையோ வேறு கணக்குடன் வீடு வருகிறார். (எக்ஸ்ட்ராவாக ஒரு ஆள் என்பதால் மீண்டும் ஒரு லட்சம் பணம் வாங்கி கொண்டு சென்று விடுகிறார்.)


இதையடுத்து வீட்டில் வேலை செல்லும் ஒரு தாழ்ந்த சமூக சிறுவனின் உதவியுடன் தப்பிக்க நினைக்கறார் கல்கி, ஆனால் தப்பிக்கும் போது சகோதர்கள் துரத்தி வந்து அந்த சிறுவனை சுட்டு கொன்றுவிட்டு கல்கியை மீண்டும் வீட்டுக்கு இழுத்து செல்கின்றனர். கோபம் கொள்ளும் அவர்கள் கல்கியை ஒரு மாட்டு தொழுவத்தில் வைத்து சித்திரவதை செய்கின்றனர்.

சிறுவன் கொள்ளப்படுவதால் கோபம் கொள்ளும் அந்த சமூகத்தினர் சண்டைக்கு வர, ஒரு சாதி கலவரமே மூள்கிறது...
கலவரம் என்னாகிறது, கல்கி நிலை என்ன...என்று ரத்தமும் சதையும், கோபம், கண்ணீர், போராட்டம் என்று மனதை கனக்கவைத்து முடிகிறது மாத்ரு பூமி.
படத்தின் முடிவு ஒரு பெரிய அதிர்ச்சி...!!!
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் மச்சான்ஸ்..!!!



திரைப்படத்தின் விவரம் :

Length          1 hour 29 minutes
Directed by    Manish Jha
Produced by    Patrick Sobelman, Punkej Kharbanda
Starring    Tulip Joshi, Sudhir Pandey, Sushant Singh, Aditya Srivastava
Music by    Salim Merchant, Sulaiman Merchant
Cinematography    Venu Gopal
Editing by    Ashmith Kunder, Shirish Kunder
Sound Mixing    Resul Pookkutty

குறிப்பு : மேற்கோள் காட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் சான்று :

http://www.gendercide.org/case_infanticide.html
http://www.articlealley.com/article_74633_28.html
Related Posts Plugin for WordPress, Blogger...