காட்சி 1:
வெகு நாள் கழித்து சென்னைக்கு ரயில் வழியாக பயணம் செய்ய நேரிட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தை ரயில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க, ரயில்வே பார்சல் ஆபீசின் தனித்துவம் நிறைந்த ஒரு தனி வாசம் நம்மை எப்போதும் வரவேற்கும். அன்றும் அந்த வாசனை எங்கள் ரயிலை வரவேற்த்தது. நம்ம சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒரு குட்டி இந்தியான்னே சொல்லிடலாம், அனைத்து மாநிலங்களின் எல்லா இன மக்களையும் இங்க பார்க்கலாம். இவ்வளவு பேரையும் பார்த்துட்டு, அவங்களோட இன்னும் ரெண்டு பேரை பார்க்க நேரிட்டது, அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.
ரயில் நின்றவுடன், ஸ்டேஷனை விட்டு வெளியே செல்லும் வழியில் மக்களோடு மக்களாய் முன்னேறி கொண்டிருந்தேன். சென்ட்ரல் ஸ்டேஷனில் நீங்கள் எல்லோரும் பார்த்திருக்கலாம், ரெண்டு பெரிய திரையில் ரயில்களின் நேர அட்டைவனை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அந்த திரைக்கு முன்னாடி இருக்கும் இருக்கைகளில் எப்போதுமே மக்களை காணலாம், பெரும்பாலும் வட இந்தியர்கள் குடும்பங்களோடு அமர்ந்திருப்பார்கள்...இப்படி ஒவ்வொரு விஷயமாக கவனித்துக்கொண்டு வரும்போதுதான் அந்த இருக்கைகளின் ஊடே அந்த சோகத்தையும் கவனிக்க நேர்ந்தது.
ஒரு இளம் பெண்(அ) தாய் மயக்கத்திலோ உறக்கத்திலோ தரையில் விழுந்து கிடந்தாள். அவள் அருகிலேயே ஒரு தவழும் கைக்குழந்தை. உடைகள் களைந்து மார்புகள் திறந்து கேட்பார் நாதியின்றி அந்த பெண் கிடக்க, குழந்தையோ இந்த கேடு கெட்ட உலகத்திற்கும் எனக்கும் துளி அளவும் தொடர்பில்லை என்று அதன் உலகத்தில் தனியாய் சிரித்து தானாய் விளையாடிக்கொண்டிருந்தது. எப்படி அங்கே வந்தாள், ஏன் அங்கே வந்தாள், எதையாவது பரிகொடுத்தவளா ? கூட வேறு யாராவது ?, இந்த விவரங்கள்
அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது. அனால் அவள் அங்குதான் வெகு நேரமாய் கிடக்கிறாள்.
அவர் அவர் வேலையில் பறக்கும் இந்த உலகத்தில் ஏனோ தனியாய் கிடக்கும் இந்த பாவப்பட்ட ஜென்மத்தை கேட்க நாதிஒன்றுமில்லை. ஏதும் செய்ய இயலாதவனாய் இந்த உலகத்தின் பத்தோடு பதினொன்றாவது 'அது'-வாக நானும் வெளியேறுகிறேன். எதுவும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியுடன்.
"என்ன பாவம் செய்தாலோ? ,
போதைல கிடக்கிறா...
எவன் பின்னாடியாவது ஓடியிருப்பா,
என்னவெல்லாமோ ஏசியது உலகம்,
உதவாமல் ஏசியவர்களை,
திட்டிக்கொண்டே வெளியேறுகிறேன் - நான்".
....
"நான்" என்பது இங்கு "நான்" மட்டுமில்லை...
காட்சி 2:
"நான்" - "அது"-வாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தேன். தாம்பரம் செல்லும் மின் ரயில் வண்டியை பிடிக்க அருகில் இருக்கும் பார்க் ரயில் நிலையத்திற்கு விரைந்த வேளையில்தான், அந்த இரண்டாவது நபரை பார்க்க முடிந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய உடன், வலப்பக்கம் திரும்பினால், புற நகர் செல்லும் ரயில்களின் நிலையம் தனியாக இருக்கும். அதை கடந்துதான் பார்க் ஸ்டேஷனுக்கு செல்ல முடியும். அது ஒரு நூறடி நீளமுள்ள நேர் சாலை. ஆட்டோக்களும், டாக்சிகளும் சவாரிகளை பிடித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த சாலையில்தான் பறந்துகொண்டிருந்தது.
அப்போது என்னை கடந்த ஒரு டாக்சியின் பின்புறம், ஏதோ தொற்றிக்கொண்டு செல்வதை உணர்ந்து பார்த்தேன். ஒரு சிறுவன் பத்து வயதிருக்கும், போலியோவால் பாதிக்கப்பட்டு மடிந்து போன கால்கள், மரப்பலகையில் சக்கரம் வைத்து, அதில் நகரும் சிறுவன். அந்த டாக்சியின் பின்னால் உள்ள BUMPER - ஐ பிடித்துக்கொண்டு, அதன் வேகத்திலேயே சென்று காரை தட்டி பிச்சை கேட்டு கொண்டிருந்தான். எங்காவது கொஞ்சம் பிசகினாலும் ஆபத்து. இப்படி அந்த இடத்தை கடக்கும் ஒவ்வொரு காராக பிடித்து கைகள் ஏந்திகொண்டிருந்தான். காரில் போகிறவர்கள் பணமாக போடுவார்கள் என்று நினைத்து கொண்டான் போல...
என் உடன் இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், கத்தினார்...
" டே, அறிவில்லையா உனக்கு ? காரை புடிச்சிக்கின்னு போறே...?
" அவனிடமிருந்து வந்த பதில்.. "போயா யோவ்..".
கடத்தியவர் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார், அவருடன் "அது"வான "நானும்".
ஏன் இவர்கள் இப்படி ?
ஏன் "நான்" இப்படி ?
.....
"நான்" என்பது இங்கு "நான்" மட்டுமில்லை...