Wednesday, October 2, 2013

சாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு!
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த 
விலைவாசியேற்ற பழியையும் 
ஒற்றை ஆளாய் தோளில் ஏந்தி நிற்பவன். 

மன்மோகன்சிங்கிற்கு அடுத்தபடியாய் 
மிடில் கிளாஸ் மக்களின் அர்ச்சனைகளை 
வாங்கி கட்டி கொண்டவன். 

இளநீர் நாற்பது ரூபாய் ஆனதுக்கும்
ஈ.சி.ஆர் வீடுகள் கோடியை தொட்டதுக்கும் 
இவனே முழு பொறுப்பு.

'ஹே dude' என்று நீலப்பல் ஹெட்போனில்  
'சார் ஸ்கோர்?' எனக்கேட்டு 
சகப்பேருந்து வியர்வைவாசிகளின் 
தீப்பார்வைகளால் தினம்  
சுட்டெரிக்கப்படுபவன். 

இவன் ஆட்டோ அண்ணாச்சி உயர்த்தும் 
ஐந்து ரூபாய்க்கு பேரம் பேச மாட்டான். 
பேருந்து நடத்துனரிடம் ஆறு ரூபா சீட்டுக்கு 
ஐநூறு ரூபாய் தாளை நீட்டி கடுப்பேத்துவான். 

ஆன்சைட் போக இவன் படும் அவஸ்தைகளை 
எந்த டிவி சீரியலும் சொல்லப்போவதில்லை. 

ஆறு மாதத்திற்கு ஒருமுறை அப்ரைசல் என்னும் 
அனல் பரீட்சையை தாண்டாமல் இவனுக்கு 
கிடைக்கபோவதில்லை ஐபாட்களும் ஐபோன்களும். 

நடுநிசி நாய்கள் படமும், பவர்ஸ்டார் பேட்டியையும் 
ஒரு சேர பார்ப்பது போல் இருக்கும் 
இவனது ஒத்தைக்கு ஒத்தை  மேனேஜர் நேர்காணல்கள். 

அரை லட்சம்  சம்பளம் வாங்கினாலும் 
பெத்தக்கடனுக்கு வட்டி கட்டிவிட்டு 
இவன் வாங்கும் வெளிக்கடன்கள் 
வெளியில் தெரிவதில்லை. 

பீட்சா கடைகளிலும் காபி டே க்களில் 
மட்டுமே இவனை பார்த்த உங்களுக்கு.. 
'சாம்பார் செய்வதெப்படி' என 
கூகுளில் கற்று இவன் 
கை சுட்டுக்கொண்ட கதைகள் 
யாருமே எழுதாதவை. 

எம்பஸி வரிசையில் மட்டுமில்லை 
தன்பசி தீர்க்க அம்மா மெஸ் வரிசையில் 
கூட அவ்வபோது தட்டுபடுவான். 

ஞாயிறு இரவுகளில்
ஊரே  'நீயா நானா' ரசிக்கையில் 
ஊருக்கு வெளியே 'ஜாவா'வே துணையாய் 
இவன் விசைப்பலகை சப்தங்கள் ஏனோ 
நம் செவிகளை தீண்டுவதே இல்லை. 

ஒய்வு நேரத்தில் இவன் 
சத்யமிலோ  டிஸ்கோதே களிலோ 
திரிந்து கொண்டிருப்பான் என்று 
நினைக்கையில் 

சாலையோர தேநீர்க்கடையில் 
தமிழ் இலக்கியம் பற்றி கூட 
தோழர்களுடன் தர்க்கமிட்டுக்கொண்டிருப்பான்  
என்ற நிகழ்வே கற்பனையில் கூட உதிர்க்காதவை.

நியாயம் பேசும் 
நடுத்திர வர்க்கம் தங்கள் 
நாலாம் வகுப்பு மழலையிடம் 
சொல்லுவர் " செல்லம் நல்லா கம்ப்யூட்டர் 
படிச்சு, வளர்ந்த பிறகு அமெரிக்கா லாம் போகணும்!" 

​-  இரா.அருண்

Friday, August 17, 2012

இருளினுள்...உன்னுடன் சேர்ந்த 
மயக்கங் கொண்ட 
பொழுதுகள் - சிம்பொனி
இரவின் சிலிர்ப்புகள் !

நம் தனிமை யூடல்கள் 

கவிதை காதல்கள்
விரல்கள் கோர்த்த 
இருபாத நடை,
விழிகள் பிரியா
தனிநிழல் சிறை !

மௌன மொழிகள் 

முத்தப் போர்கள் !
'இச்' - உயிர்மெய், முதல் பாதம்.
தொடர்க,
'ப்ச்' - மெய்யுடன் மெய் !

இறுக்கம் அடர்ந்த 

மூச்சுக் காற்றில் 
கவனம் சிதறி 
இயற்கை பிரளும் !

ஸ்பரிச கோடுகள் 

இறுக்கம் சேர்க்க 
விழிமூடினும் பொருள் 
தேடுது - இருள் 
காட்டிலொரு கலவிக் காதல்.

 - சிவன் 

Wednesday, February 15, 2012

உன் இன்மை
புகைப்படங்கள் நிரம்பிய படுக்கையறை
இசைத்தட்டுகள் இறைந்து கிடக்கும் ஊஞ்சல் 
ஸ்பரிசங்களை சேகரித்த அலமாரி 
உரையாடல்கள் உறைந்திருக்கும் சுவர்கள்
.
.
என்னை விட உன் வெறுமையை 
எப்படி தாங்கப்போகிறதோ
நம் கற்பனை வீடு.

*****

மிரளச்செய்யும் அன்பு 
மிரட்சி கலந்த ஆளுமை 
எது நீ? எது நான் ?
மாறிப் போவதறியாமல் 
முழித்து விழிக்கையில் 
கடந்து விடுகிறது 
இன்னுமோர் இரவு!

*****

மழை விரும்பா தாவரம் 
எரிதழல் தீண்ட எஸ்கிமோ 
உன் விலகலில் நான். 
*****                                                                         - அருண்.இரா
Related Posts Plugin for WordPress, Blogger...